|
செவன்த் சேனல் தயாரிப்பில், தம்பி ராமையா இயக்கத்தில் சபேஷ் முரளி இசையில், கோபிநாத் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்'.
இதில், வடிவேலு, யாமினி ஷர்மா, சுஜா, ராரீ, நாசர், தியாகு, மனோபாலா, குமரிமுத்து, ஓ.ஏ.கே. சுந்தர், இளவரசன், ரிஷிவந்திகா, உஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'. நாடகம் நடித்து பிழைப்பு நடத்தும் அழகப்பன், திருமண தோஷத்திற்காக பரிகாரம் செய்வதாக நினைத்து இந்திரன் சாபத்தால் கல்லாக மாறிய ரம்பைக்கு மாலை அணிவிக்கிறார். அழகப்பனின் நகைச்சுவை திறனையும், சிந்தனையையும் கண்டு பூரித்துப் போன ரம்பை, மாலையிட்டவனையே மணாளனாக நினைத்து இரவானால் மேலோகத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறார்.
பகல் முழுவதும் பூலோகம், இரவானால் இந்திரலோகம் என மாறி, மாறி போரடிக்கிறார் வடிவேலு.
மேலோகத்தில் இந்திரன், எமதர்மன் என எல்லோரையும் கலாய்த்து, மனிதர்களின் முக்காலமும் குறித்து வைத்திருக்கும் சுவடியை படித்து பூலோகத்தை புண்ணிய பூமியாக மாற்றுகிறார் அழகப்பன். இந்த அம்புலிமாமா பூச்சுற்றல் இந்திரனின் சாபம்,
அதற்கான விமோசனம் என்று ஓடி முடிவதற்குள் கொட்டாவியும், குட்டித் தூக்கமும் வந்து விடுகிறது.
படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை திரை முழுவதும் வந்து போகும் வடிவேலு முகத்தால் அலுத்துப் போகிறது ரசிகர்களுக்கு.
'பொய்க்கால் குதிரை' என்ற பாடலுடன் அறிமுகமாகும் வடிவேலுவை விசில் அடித்து வரவேற்ற ரசிகர்கள், அவரது 'கடி' யைத் தாங்க முடியாமால் பொறுமையிழந்து தியேட்டரில் பொங்கி எழுவதையும் காண முடிகிறது. அந்த அளவிற்கு படம் நெடுகிலும் 'மெசேஜ்' அட்வைஸ்.
ஏற்கனவே மூன்று வேடங்கள் (அழகப்பன், எமன்,இந்திரன்), போதாக்குறைக்கு 90 வயது கிழவன் வேடமும். தான் விரும்பிய வேடத்திற்கெல்லாம் அரிதாரம் பூசியுள்ளார் போல வடிவேலு.
காமெடி படமா, இல்லை டாக்குமென்டரி படமா என்ற சந்தேகம் மனதில் எழுகிறது. அவ்வளவுக்கு சோகம் நெஞ்சை பிழிகிறது.
அழகப்பன் ஏன் இப்படி அழுகையப்பனாக மாறிவிட்டார் என்றெ தெரியவில்லை.
கரகர குரலும், எருமை கனைப்புமாக எமனாக வரும் வடிவேலுவின் இருப்பும், செருக்கும் திரையரங்கை திணறடிக்கிறது. கண்டிப்பாக சபாஷ் போடலாம். குறிப்பாக அவரது வாகனமான எருமை கிராபிக்ஸ் அருமை. நல்லவரா...கெட்டவரா... காமெடி ரசிகர்களைக் கைதட்ட வைக்கிறது.
இந்திரன் வடிவேலுவின் மன்மத விளையாட்டு நாரதரிடம் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் சிரிப்பில் அரங்கு அதிர்கிறது. அழகப்பன் லோக்கல் கள்ளச் சாராயத்தை எமலோகத்துக்கு கடத்துவதும், எமன் மற்றும் கிங்கரப் படைகளுக்கு ஊற்றிக் கொடுத்து எமனின் ஆட்களை வைத்தே எமனை கொலை செய்ய முயற்சிப்பதுமான இயக்குனரின் சிறுபிள்ளைத் தனமான சிந்தனை படம் நெடுக சிற்றாறு போல ஒடுகிறது. விகரமன் படத்தைப் போல ஒரே பாடலில் அழகப்பனால் சட்டென்று பூலோகம் புண்ணிய லோகம் ஆவது நரக அவஸ்தை. இப்படத்திற்கு எப்படித்தான் 'யு' சர்ட்டிபிகேட் கொடுத்தார்களோ...? ரம்பையாக வரும் யாமினி ஷ்ர்மா அப்படி ஒரு கிளாமர். அழகா...அழகா... என்று அழகப்பனிடம் வழிகிறார். இல்லையென்றால், இந்திரன் சபையில் நடனம் ஆடுகிறார்.
படத்தில் நாசரின் நாரத வேடம் கன கச்சிதம். தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் நாசர்.
ஸ்ரேயாவின் குத்துப் பாடலும் படத்தில் வலுக்கட்டாயமாக செருகப்பட்டதாகவே தோன்றுகிறது. படத்தின் ரியல் ஹீரோ கலை இயக்குனர் தோட்டா தரணி. இவரது பிரமாண்ட செட் இல்லையென்றால் 'இந்திரலோகத்தில் நா..அழகப்பன்' டிவி சீரியலாகி இருக்கும். அட்டகாசமான வேலைப்படுகளால், அரங்கம் அமைத்துக் கொடுத்து ஸ்கோர் செய்துள்ளார். கண்களை உறுத்தாத கோபிநாத்தின் ஒளிப்பதிவும் அருமை. பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் சபேஷ் முரளியின் பின்னணி இசை படத்திற்கு பலம். ஹர்ஷாவின் படத்தொகுப்பும் பரவாயில்லை. என்றாலும் கிளைமேக்சை வேகமாக முடித்திருக்கலாம்.
நீளமான அறிவுரைகள், அழுத்தமில்லாத காட்சிகள் என படத்தில் கொஞ்சமே இருந்த காமடியையும் மங்கச் செய்து விட்டது.
'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' காமெடி இல்லாத 'இம்சை' அரசன்.
|