ஜன.,17 : எம்ஜிஆர் பிறந்த தினம்
|
|
Thursday, 17 January 2008 |
|
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987)
தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் தான் இறக்கும் தருவாய் வரை முதல்வராக இருந்த எம்ஜிஆர் பிறந்த தினம் இன்று.
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.
சிறுவயதில், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல், நாடகங்களில் நடிக்கத்துவங்கினார். இதைத் தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இராமச்சந்திரன், திரைத்துறையில், தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து முத்திரை பதித்தார்.
இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க்காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு வாரிசுகள்இல்லை.
இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அஇஅதிமுக) என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.
1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
|