|
சோனியா காந்தி அவசர ஆலோசனை
|
|
Tuesday, 24 June 2008 |
|
புதுடெல்லி ஜுன் 24:
அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் இடதுசாரிகள் விதித்த கெடு நாளை முடிகிறது. இதையொட்டி கூட்டணி கட்சி தலைவர்களுடன் சோனியாகாந்தி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை உடனடியாக வாபஸ் வாங்கிவிடுவோம் என்று இடதுசாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டன.
அணுசக்தி ஒப்பந்த பிரச்சனை பற்றி இறுதி கட்டமாக விவாதிக்க மத்திய அரசு இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு தனது நிலையை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் கெடு விதித்துள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை வாபஸ் பெற்றால் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவுடன் அரசைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலைமை இருந்ததால் அணு ஒப்பந்தத்தை செய்துகொள்வதில் மன்மோகன் அரசு தீவிரம் காட்டியது.
இதனிடையே அரசுக்கு அளிக்கும் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சி வாபஸ் பெற்றது. இதனிடையே அணு ஒப்பந்தப் பிரச்சனையில் அரசு கவிழ்ந்து தேர்தல் வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. விலைவாசிஉயர்வு பணவீக்கம் போன்ற பிரச்சனை நிலவிவரும் நிலையில் தற்போது தேர்தலை சந்தித்தால் பின்னடைவு ஏற்படலாம் என்பதால் தேர்தலை சந்திப்பதில் தயக்கம் காட்டிவருகின்றன. தற்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த சோனியாகாந்தி உடனடியாக தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே கம்யூனிஸ்ட் கட்சிகளை அனுசரித்து செல்லலாம் என்று முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனிடையே இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அணுஒப்பந்தம் குறித்து தீவிர ஆலோசனை நடத்துகிறார்கள்.
|