|
பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
|
|
Thursday, 17 July 2008 |
|
புதுடெல்லி ஜுலை 17:
முதலில் காங்கிரசுக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என கருதப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு மிகவும் கடுமையான போட்டியாக மாறியுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த அதிருப்தி எம்பிக்களை வளைக்கும் வேலைகளை அந்தக் கட்சி ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களுக்கு பாஜக குறி வைத்துள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் போட்டி போட்டுக் கொண்டு அந்தக் கட்சியில் சேர ஆரம்பித்துள்ளனர். வருபவர்களுக்கு எல்லாம் அமைச்சர் பதவி தந்து அழகு பார்த்து வருகிறது பாஜக.
இதையடுத்து எம்எல்ஏக்கள் தவிர பல மூத்த காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர்களும், இதில் சில எம்பிக்களும் அடக்கம், பாஜகவுக்கு தாவ தருணம் பார்த்துக் கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தி்ல் இப்போதுள்ள நிலவரப்படி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவே வெல்லும் என இவர்கள் கருத ஆரம்பித்துள்ளதால், அந்தக் கட்சிக்குத் தாவ இவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதை அப்படியே தனக்கு சாதகமாக பயன்படுத்து நம்பிக்கை வாக்கெடு்ப்பில் காங்கிரஸை தோற்கடிக்கச் செய்ய கர்நாடக பாஜக தலைவர்கள் முயன்று வருகின்றனர். கர்நாடகத்துக்கான கட்சியின் பொறுப்பாளர் அருண் ஜேட்லியும் இந்த வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதுவரை 2 முக்கிய காங்கிரஸ் எம்பிக்களை பாஜக தரப்பு வளைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த தேர்தலில் பாஜக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் தரப்படும், மத்திய அமைச்சரவையில் இடம், லோக்சபா தேர்தலில் தோற்றால் ராஜ்யசபா எம்பி பதவி-அமைச்சர் பதவி என இவர்களிடம் பேரம் பேசி வளைத்துள்ளது பாஜக.
இன்னும் ஒரு வருடமே பதவிக் காலம் உள்ள நிலையில், தங்களது எதிர்காலத்தை பிரகாசமாக்கிக் கொள்ள மேலும் சில காங்கிரஸ் எம்பிக்களும் பாஜகவுக்கு ஆதரவாகத் தாவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தடுக்க காங்கிரசும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
22ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில் அதிவேக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த 6 நாட்களில் மேலும் பல அரசியல் மாற்றங்கள் நிகழலாம்.
|