தேவையானப் பொருட்கள்
சீரக சம்பா அரிசி - 3 கப், மட்டன் - அரை கிலோ, இஞ்சி - 50 கிராம், பூண்டு - 25 பல், பெரிய வெங்காயம் - 4, சின்ன வெங்காயம் - 15, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 4, கிராம்பு - 4, பட்டை - 4 துண்டு, ஜாதிக்காய் - பாதி, ஏலக்காய் - 4, ிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன், கரம்மசாலா - 1/4 டீஸ்பூன், தேங்காய் - 1 மூடி, முந்திரி - 10, தயிர் - 1/2 கப், எலுமிச்சம்பழம் - மூடி, புதினா - 1 கட்டு, மல்லி - 1 கட்டு, நெய் - அரை கப், எண்ணெய் - அரை கப்.
தாளிக்கத் தேவையானவை
கிராம்பு - 3, பட்டை - 3 சிறிய துண்டு, ஏலக்காய் - 3, பிரிஞ்சி இலை - 1, சோம்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை முதலில் மட்டனை நன்கு கழுவி எடுத்துக் கொண்டு அதில் கால் கப் தயிர் ஊற்றி, மஞ்சள் தூள், கரம் மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையை குக்கரில் வேக வைக்கவும். மூன்று முதல் ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும்.
மற்றொருபுறம் வாணலியில் தாளிக்க வேண்டிய பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை போட்டு அதில் நெய் விட்டு நன்றாக வறுத்து அதனை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பச்சமிளகாயையும் கூட அவ்வாறு நறுக்கி வைத்துக் கொள்ளலாம். பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும். காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.
எண்ணெய் பிரியும் வரை வதக்கி விட்டு, நறுக்கிய தக்காளியை போடவும். தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும். இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.
உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும். பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும். பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து பார்த்தால் சுவையான மணமான செட்டிநாட்டு மட்டன் பிரியாணி தயாராகி இருக்கும்.
|