|
சென்னை ஜுலை 18:
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை தாக்குவதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், கடலோர நகரங்களில் திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
திமுக உயர்மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டம் நேற்று மாலை முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கண்மூடித்தனமாகக் கொல்லப்படுவதும், தேவையற்ற முறையில் கைதுசெய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
மனித உரிமை மீறல்களையும், கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் உரிமைகளையும் சட்ட விரோதமாகத் தடுத்து, நாள்தோறும் தமிழக மீனவர்ளுக்கு பல்வேறு இன்னல்களை இலங்கை கடற்படை ஏற்படுத்தி வருகிறது.
இந்த செயல்களால் ஆழ்ந்த வேதனையுற்ற திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, இவ்வித அத்துமீறல் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசின்கவனத்துக்கு பலமுறை எடுத்துச் சென்றுள்ளார்.
மேலும் திமுக பொருளாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் ஒரு குழு சென்னையில் உள்ள இலங்கைக்கான தென்னிந்திய துணைத் தூதரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடுகளையும், அத்துமீறல்களையும் கண்டித்து இந்த செயல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் என்று 12.3.07 அன்று வலியுறுத்தியது.
இலங்கை துணைத் தூதர் இதுபோன்றநிகழ்வுகள் நடைபெறாது என்று இக்குழுவிடம் உறுதி அளித்தார். இருந்தாலும் தமிழக மீனவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்த ஆண்டு ஜூலை 2 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்படை பலதமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றும், படுகாயப்படுத்தியும், 900 மீனவர்களைக் கைது செய்தும், 300 மீன் பிடிப் படகுகளை கைப்பற்றியும், அவர்களது உடமைகளை சேதப்படுத்தியும் பல அட்டூழியங்களைச் செய்தது.
இவை தமிழக மீனவர்கள் மனதில் நீங்காத அச்சத்தையும், இதன் காரணமாக அவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொள்வதற்கு பெரும் தடையையும் ஏற்படுத்தி மீனவர்களின் ஒரே வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது.
கடலுக்குள் மீனவர்கள் சென்று மீன் பிடிப்பதை நிறுத்தி இருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவச்சங்க பிரதிநிதிகளை முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலகத்திற்கு அழைத்துப் பேசிய பிறகு அவர்கள் திரும்பவும் பணிக்குத் திரும்ப ஒத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதுஅடிக்கடி தேவையற்ற முறையில் நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு உரிய தலையீட்டின் வழியாக இலங்கை அரசிடம் இந்தப் போக்கை எடுத்துக்கூறி தமிழக மீனவர்களுக்கு எதிரான தேவையற்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தி இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களை அச்சத்திலும், அச்சுறுத்தலிலும் இருந்து மீட்டு, அவர்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடுமையான நடவடிக்கை தேவைப்படுகிறது.
மீனவர்களின் உயிர், உடமை, உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில தீர்மானங்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைதாங்குகிறார். பிற ஊர்களில் அமைச்சர்கள் தலைமை தாங்குகிறார்கள்.
|