|
அம்மாடியோவ் எவ்வளவு பெரிய சுடிதார் !
|
|
Friday, 30 November 2007 |
|
- பழனியப்பன்-
சுடிதாரை விரும்பாத பெண்கள் என்று யாரும் இருக்க முடியாது. அத்தனை வரவேற்பைப் பெற்ற சுடிதாரைக் கொண்டு சாதனை படைக்க நினைத்தார் ஒரு வாலிபர்.
கோவையைச் சேர்ந்த விஜயன் என்பவர்தான் அவர். கின்னஸ் சாதனைக்காக முதல் முறையாக 47 அடி நீளத்தில் சுடிதாரை வடிவமைத்து மக்களின் பார்வைக்கு வைத்தார்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் விஜயன். இவர் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என் மில்ஸ் பகுதியில் நிம்மிஸ் லேடிஸ் டிசைனர்ஸ் என்ற தையலகத்தை நடத்தி வருகிறார்.
மற்ற தையல்காரர்களைப் போல் இல்லாமல், தையல் துறையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேகமும் வெறியும் விஜயனிடம் இருந்தது.
வேகம் மட்டும் இருந்தால் போதுமா...? விவேகமும் வேண்டாமா! அப்படி விவேகமாக யோசித்ததன் பலன்தான் இந்த 47 அடி சுடிதார்.
சுடிதாரின் டாப்ஸ் 30 அடி நீளத்திலும், அதன் பேண்ட் (கீழ்பாகம்) 17 அடி நீளத்திலும் விஜயன் உருவாக்கி இருந்தார்.
இந்த 47 அடி சுடிதாரை தற்போது கின்னஸ் சாதனைக்காக விஜயன் அனுப்பி உள்ளார்.
இந்த சுடிதார் யோசனை இன்று நேற்று வந்ததில்லையாம்! கடந்த 2005ம் ஆண்டில் தனது கடை விளம்பரத்தையே சற்று வித்தியாசமாக பரப்ப விரும்பிய விஜயன் 23 அடி நீளம் கொண்ட பேனரை தயாரித்து சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக தனது கடையின் முன்பு தொங்கவிட்டிருந்தார்.
அப்போதுதான் இந்த சுடிதார் யோசனையும் உருவாகி இருக்கிறது விஜயனுக்கு.
விஜயனின் இந்த சாதனை தாகம், 47 அடி நீள சுடிதாரோடு தணிந்து விடப் போவதில்லையாம். அடுத்ததாக, உலகிலேய மிகப் பெரிய தேசியக் கொடியை வடிவமைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமிற்கு கடிதமும் எழுதினார்.
கின்னஸ் சாதனைக்கு அனுப்பப்பட்ட சுடிதார் கின்னஸ் தேர்வுக்குழுவினரின் பரிசீலனையில் இருக்க, அதற்காக காத்திருக்காமல் மிகப் பெரிய தேசியக் கொடியை உருவாக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார் இந்த சாதனைச் சிங்கம்.
|