அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சூர்யாவின் இலவச டியூசன் சென்டர் திட்டம்
Thursday, 17 July 2008
 ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்கு கலங்கரை விளக்காக திகழும் சிவக்குமாருக்கும், சூர்யாவுக்கும் கல்வியின் காவலர்கள் என்ற பட்டம் கொடுக்கலாம்.

தனது கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 28 ஆண்டுகளாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறார். இதன் 29ம் ஆண்டு நிகழ்ச்சி சென்னை பிலிம்சேம்பர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் மூன்று லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகையை சிவக்குமார் வழங்கினார்.

விழாவில் பேசிய சிவக்குமார், "1979-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய சிவகுமார் கல்வி அறக்கட்டளை, தொடர்ந்து தன்னால் முடிந்த கல்வி வளர்ச்சி உதவிகளைச் செய்து வந்தது. 25 ஆண்டுகள் முடிந்த பிறகு சூர்யா அந்தப் பணியை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்து வருகிறார். சென்ற ஆண்டு நான் வழங்கிய உதவித்தொகையை விட 100 சதவிகிதம் அதிகமாக இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து படிக்கிறவர்கள் எத்தகைய கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்பது மற்றவர்களுக்கு செய்தி. எனக்கு அனுபவம். சென்னையில் தங்கி படிக்கிற காலத்தில் குளிக்கும் சோப் வாங்க முடியாமல் தவித்த நாட்கள் உண்டு. என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களைத் தமிழகம் முழுவதும் தேடிப்பிடித்து கல்வி உதவி வழங்குவதில் எனக்கு தனிப்பட்ட மனநிறைவு, வருங்காலங்களில் இன்னும் நிறைய மாணவர்களின் வாழ்வில் கல்வி விளக்கேற்ற முயற்சிப்போம்" என்றார்.

விழாவில் சூர்யா கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப்பேசினார். "29 வருடங்களாக அப்பா செய்துவரும் சேவையைப் பார்த்துதான், 'அகரம் பவுண்டேஷன்' என்ற அமைப்பை நான் தொடங்கினேன். அகரம் அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ள அன்புகுமாருக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. அவரின் கல்விக்கான மொத்த செலவையும் அகரம் அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்வியாண்டில் தமிழகம் முழுதும் இலவச டியூசன் சென்டர்கள் அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும் அரசுப் பள்ளிகளில் நூலகம் அமைக்கும் முயற்சியிலும் அகரம் அறக்கட்டளை இறங்கியிருக்கிறது. இதுதவிர கிராமப்புற பள்ளிகளில் இருக்கும் ஊர்களில் பள்ளயின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கல்வி நலக்குழு அமைக்கும் திட்டமும் தயாராகி வருகிறது என்றார்".

விழாவில் திண்டிவனம் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அதன் பொறுப்பாளர்  கல்யாணியிடம் ரூபாய் 2 லட்சத்துக்கான காசோலையை சூர்யா வழங்கினார். முன்னதாக சிவகுமார் மகள் பிருந்தா சிவகுமார் இறைவணக்கம் பாடினார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா வரவேற்புரை வழங்கினார். முடிவில் எஸ்.கே.பிரபு நன்றி கூறினார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code