|
கடந்த வாரத்தில் உலகின் மிக முக்கியத் திருப்பமாக பாகிஸ்தானில் கடந்த ஒன்றரை மாதமாக அமலில் இருந்த அவசரநிலை தளர்த்தப்பட்டது. அதிபர் முஷாரப்பின் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் வரவேற்றன. கடந்த வாரத்தை உலுக்கிய மற்றொரு சம்பவம், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் படித்து வந்த இரண்டு மாணவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். துபாயில் புகை பிடிக்கத் தடை
துபாய் :பொது இடங்களில் புகைபிடிக்க துபாய் நகராட்சி தடை விதித்துள்ளது. இதை மீறுவோருக்கு பெருமளவு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
துபாயில் பொது இடங்களான பலசரக்கு அங்காடிகள், கடைகள், உணவுவிடுதி, கேன்டீன், இரவு விடுதி மற்றும் பார்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜெனரல் அப்துல்லா ரபீக் கூறியதாவது:வரும் ஜனவரி மாதம் முதல் துபாயில் பொது இடங்களில் புகை பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு பெருமளவு அபராதம் விதிக்கப்படும்.
துபாய் நகராட்சியைச் சேர்ந்த சோதனையாளர்கள் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் சுற்றி வருவர்.
இவர்களுக்கு உதவியாக துபாய் போலீசாரும் செயல்படுவர். இந்த குற்றத்தில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்படும் நபர்கள் பற்றி கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் புகைபிடிக்க கூடாது என்று நகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடும் சண்டை கொழும்பு : இல்ங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த கடும் சண்டையில், 49 புலிகளும், 26 ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் தனிநாடு கோரி, விடுதலைப் புலிகள் கடந்த இருவது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இருதரப்புக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தம் மீறப்பட்டு, தற்போது அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள தமிழ் மக்கள் இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். மன்னாரை அடுத்த அடம்பன், பாலக்குழி, முகமாலை, நாகமுல்லை, மட்டக்களப்பு அதனையடுத்த நரிக்குளம், பாப்பக்கண்டல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த சண்டையில் விடுதலைப் புலிகள் 49 பேரும், ராணுவத்தினர் 20 பேரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் சம்பவம் நடந்து வரும் பகுதிகளில் இருந்து 550 கண்ணி வெடிகள் கைப்பறறப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சண்டையில், இருதரப்பிலும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
மலேசியாவில் சூடு பிடிக்கிறது போராட்டம்
கோலாலம்பூர்: மலேசியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தமிழர்கள் கைது செய்யப்பட்ட போதும், தமிழர்கள் யாரும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. மாறாக போராட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளது. தமிழர்கள் மீது மலேசிய அரசு இனப் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இவர்களில்
பெரும்பான்மையானோர் தமிழர்கள். இந்துக்கள் உரிமை நடவடிக்கை அமைப்பு (இண்ட்ராப்) என்ற அமைப்பு சம உரிமை கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளது.
நவம்பர் 25ம் தேதி கோலாலம்பூரில் இந்த அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் தமிழர்கள் பங்கேற்றனர். அது முதல் மலேசிய அரசு கடும் கோபத்தில் உள்ளது. இண்ட்ராப் அமைப்பின் தலைவர் உதயகுமார் உள்ளிட்ட பலர் மீது ஏற்கனவே கிளர்ச்சி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய புதிய சட்டம் ஒன்று வியாழக்கிழமை அமல்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின் படி, கைது செய்யப்படுபவர்கள் விசாரைணை இன்றி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படுவர். 
போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தமிழர்களான உதயகுமார், மனோகரன், கணபதிராவ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டும், மலேசியாவில் போராட்டம் குறைந்தபாடில்லை. மாறாக போராட்டம் மேலும் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் மீது மலேசிய அரசு இனப்பாகுபாடு காட்டுகிறது. இந்த அரசின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம், என இந்து உரிமை குழு அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக லண்டனில் உள்ள இந்தியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்,என்றார்.
இந்தியா மாணவர்கள் இருவர் அமெரிக்காவில் படுகொலை
நியூயார்க் : ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் லூசியாணா மாகாணத்தின் பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
ஆந்திர மாநிலததைச் சேர்ந்த சந்திரசேகர ரெட்டி கோமா(31),கிரண் குமார் ஆலம்(33) ஆகிய இருவர் அமெரிக்காவின் லூசியாணா மாகாணத்தில் உள்ள எல்எஸ் பல்கலைக்கழகத்தில் இருவரும் வேதியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தனர். ஆலம் என்பவர் ஐதராபாத் மாநிலத்திலும், கோமா குர்னூல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்.
சம்பவம் நடந்த அன்று ஆலம் வீட்டிற்கு கோமா வந்திருந்தார். இரவு வெகு நேரம் ஆகியம் கோமா வெளியே வராததால், ஆலமின் கர்ப்பவதி மனைவி அவர்கள் இருந்த அறைக்கு வந்து பார்த்துள்ளார்.
அந்த இருவரும் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொலை நடந்த சில நிமிடங்களில் மூன்று மர்ம மனிதர்கள் அங்கிருந்து வெளியேறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் அவசரநிலை ரத்து இஸ்லாமாபாத் : கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக பாகிஸ்தானில் அமலில் இருந்த அவசரநிலை(Emergency) இன்று தளர்த்தப்பட்டது.
பாகிஸ்தானில் கடந்த நவம்பர் 3ம் தேதி, அதிபர் முஷாரப் அவசரநிலைச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார். இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்திரி அப்பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி பதவியில் இருந்து முஷாரப் விலகிக் கொண்டார். மீண்டும் ஒருமுறை அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 16ம் தேதி பொதுத் தேர்தலை அறிவித்தார்.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் பெனாசிர் பூட்டோ நாடு திரும்பி தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அட்டார்னி ஜெனரல் மாலிக் கயூம் தெரிவித்தார்.
அதிபரின் இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன
|