|
Monday, 24 December 2007 |
|
கிறிஸ்தவர்களின் முக்கியமான தினம் கிறிஸ்துமஸ். உலக நன்மைகளைப் போதித்த மீட்பர் இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தையே கிறிஸ்தவர்கள் 'கிறிஸ்துமஸ்' தினமாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகளைகளையும், வாழ்த்துக்களையும் பறிமாறிக் கொள்வர்.
இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகளை கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், முக்கிய தேவாலயங்களிலும் காண முடியும். பாதிரியார்கள் சண்டகிளாஸ் பொம்மை வேடமணிந்து குழந்தைகளை மகிழ்விப்பர். கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் பாடல் ஆகியனவும் கிறிஸ்தவ கொண்டாட்டங்களில் முக்கிய அம்சம்.
இயேசு பிறந்த கதை பைபளின் படி, கேபிரியேல் என்ற இறைத்தூதன், பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்க இருக்கிறார், என கன்னி மரியாளிடம் தெரிவித்தார். அதுசமயம் மரியாள் யோசேப் என்பவரை மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப் மரியாளை மணமுடிக்காது கைவிட திட்டமிட்டார். எனவே, இறைத்தூதர் யோசேப்பிடம் தோன்றி மரியாள் கருவில் உற்பத்தியாயிருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவித்தார். இதையடுத்து, யோசேப் மரியாளை மனவியாக ஏற்றுக்கொண்டார்.
மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த அகோஸ்துராயர் என்ற மன்னர் மக்கள் தொகை கணக்கீட்டுக்கு அனைவரும் பதிவு செய்ய வேண்டும், என கட்டளயிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோர்கள் வாழ்ந்த நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். அப்போது தங்குவதற்கு அறைகள் கிடைகாத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம்மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை ஈன்றெடுத்தாள்.
இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவித்தார். மேலும் பரலோக இறைத்தூதரனைவரும் அவர்கள் முன் தோன்றி "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமையும், இப்பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர்.
இயேசு பிறந்த தினம் டிசம்பர் 25ம் தேதி என்பதாலேயே இந்நன்நாளை 'கிறிஸ்துமஸ்' தினமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
|