அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்றவார உலகம் : 29-12-07
Monday, 31 December 2007

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் செல்வாக்கு மிகுந்த எதிர்க்கட்சித் தலைவருமான பெனாசிர் பூட்டோ மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டது சர்வதேச அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத செயலுக்கு உலகின் ஒட்டுமொத்த நாடுகளும் ஓரணியில் நின்று தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

 

பாக்.,முன்னாள் பிரதமர் பெனாசிர் படுகொலை


 ராவல்பிண்டி : தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ  மரணமடைந்தார்.

பாகிஸ்தானில் ஜனவரி 8 ம் தேதி நடைபெற இருக்கும் பார்லிமென்ட் பொது தேர்தலுக்காக, கடந்த வியாழன் மாலை  ராவல்பிண்டியில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி முடித்து விட்டு தனது காரில் ஏறிய போது மர்ம நபர்களால் பெனாசிர் பூட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த சம்பவம் நடந்த ஒருசில மணித்துளிகளில் கூட்டத்தின் இடையே மர்ம நபர் ஒருவர் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

பெனாசிர் உடனடியாக ராவல்பிண்டி பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் பூட்டோ உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.

நவாஸ் ஷெரீப் கூட்டத்திலும் தாக்குதல் :

ராவல்பிண்டியில், பெனாசிரின் கூட்டத்திற்கு அருகே முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திலும் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. இதில் ஐந்து பேர் பலியானார்கள்.

இந்நிலையில், பெனாசிர் இறந்த செய்தியறிந்த ஷெரீப், உடனடியாக ராவல்பிண்டி மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார்.

மறைந்த பெனாசிர் பூட்டோவுக்கு வயது 54.  இவர் தன் கணவர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் மூன்று  குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

ஊழல் வழக்குகள் காரணமாக துபாய்க்கு நாடு கடத்தப்பட்ட பெனாசிர் கடந்த அக்டோபரில் பாகிஸ்தான் திரும்பினார்.  

பாகிஸ்தான் திரும்ப வேண்டாம் என்று அதிபர் முஷாரப் அப்போதே பெனாசிரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனை மீறி   பாகிஸ்தான் திரும்பிய போது நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சொந்த ஊரில் அடக்கம்

இஸ்லாமாபாத் : படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர்
பூட்டோவின் உடல் அவரது சொந்த ஊரில் லர்கானா என்ற இடத்தில் அவரது தந்தை சமாதிக்கு
அருகில் வெள்ளிக்கிழமை(28ம்தேதி) அடக்கம் செய்யப்பட்டது.

பெனாசிரின் உடல் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான  
நவுடெரோவுக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக ராணுவ விமானம் மூலம்
ராவல்பிண்டியில்  சக்லாலா பகுதியில் இருந்து சுக்கூர் என்ற கிராமத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டு அங்கிருந்து தனிவிமானம் மூலம் நவுடெரோவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெனாசிர் உடலுடன் அவரது கணவர் ஆசிப் அலி ஜர்தாரி மற்றும் மூன்று குழந்தைகள்
ஹெலிகாப்டரில் வந்தனர்.

பெனாசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜூல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு
அருகிலேயே இவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

பெனாசிரின் உடல் அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கொடியினால் போர்த்தப்பட்டு கொண்டு
வரப்பட்டது. இறுதிச் சடங்கில் அவரது சகோதரி சனமும் கலந்து கொண்டார்.

இறுதிச் சடங்கின் போது, ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும், ஊர் மக்களும் திரண்டிருந்து
அஞ்சலி செலுத்தினர்.

பெனாசிர் மரணம் : நீடிக்கும் மர்மம்

 இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களும் விடை தெரியாத கேள்விகளும் எழுந்துள்ளன். இந்நிலையில், பெனாசிர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படவில்லை, என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வியாழன்று மாலை ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிவிட்டு காரில் ஏறிய முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ எப்படிக் கொல்லப்பட்டார் என்பது குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

பெனாசிர் கார் புறப்பட்ட ஒருசில மணித்துளிகளில் அந்த இடத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், பெனாசிர் மர்ம நபர்களால் ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியானாது.

பெனாசிர் உடலை பரிசோதித்த ராவல்பிண்டி பொதுமருத்துவமனை டாக்டர்களும் அவரது கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் ஐந்து குண்டுகள் பாய்ந்துள்ளது எனத் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், பெனாசிர் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி மரணமடையவில்லை என்று கூறப்படுகிறது.

இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறியதால் இறந்திருக்கலாம் என்று தற்போது கூறப்படுகிறது.

குண்டு வெடித்த அதிர்வில் பெனாசிரின் கார் கூரை சேதமடைந்து இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, பெனாசிர் உடலில் இருந்து துப்பாக்கி குண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது டாக்டர்கள் தெரிவித்த கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது.

அடுத்ததாக, பெனாசிர் இறந்துவிட்டதாக அறிவித்த டாக்டர்கள், அவரது உடலை ஏன் பிரேத பரிசோதனை செய்யவில்லை.

பெனாசிர் இறந்த ஒரு மணிநேரத்தில் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை, என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால்,

இயற்கைக்கு மாறாக மரணமடையும் ஒருவரின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது மருத்துவர்களின் கடமை.

பிரேத பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் பெனாசிர் தலையில் பலத்த அடி பட்டு இறந்தார் என்று கூறப்படுவது எவ்வாறு என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை.

ஆனால், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், பெனாசிர் மரண அறிக்கையில் ஒன்பது டாக்டர்கள் கையெழுத்திட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

பெனாசிர் வந்த காரின் ஜாமர் சம்பவம் நடந்த போது வேலை செய்யவில்லை. இதனை பெனாசிரின் பாதுகாவலர்கள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே, பெனாசிர் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில், இது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும், என அமெரிக்கா பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

முதலில் ஒப்புக்கொண்ட அல்கொய்தா பின்னர் மறுப்பு

பெனாசிர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அல் கொய்தா தீவிரவாதிகளின் இணைய தளத்தில், பெனாசிர் படுகொலைக்கு நாங்கள்தான் காரணம்  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அல் ஜவாகிரி திட்டமிட்டு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது, என அமெரிக்க உளவு அமைப்பான 'எப்பிஐ' தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த முஸ்தபா அபு அல் யாசித் என்ற தீவிரவாதி,
பாகிஸ்தானின் ஏகேஎல் என்ற பத்திரிகை நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் கூறியது :

பெனாசிரை எங்கள் இயக்கம்தான் திட்டமிட்டு கொலை செய்தது. அமெரிக்காவின் செல்வாக்கு மிகுந்த தலைவர் பெனாசிர்.

மேலும் அவர், முஜாஹிதீன் அமைப்பை வேறோடு அழிக்கப் போவதாக சபதம் எடுத்திருந்தார். எனவே அவரைக் கொன்றோம்.

இவ்வாறு தொலைபேசியில் அந்த தீவிரவாதி தெரிவித்தான்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை, அல்கொய்தா இயக்கத்தின் மற்றொரு தலைவர், பெனாசிர் படுகொலைக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தது.

தற்போது எழுந்திருக்கும் விடை தெரியாத பல கேள்விகளும், முன்னுக்குப் பின்னான பல முரண்பாடான தகவல்களும்  முன்னாள் பிரதமர் பெனாசிர் திட்டமிட்டே கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த படுகொலைக்குப் பின்னால் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் உள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் மற்றும் பெனாசிரின் மக்கள் கட்சியும் குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் ராணுவம் கடும் சண்டை


கொழும்பு : இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 21 பேர் பலியானார்கள்.

 

இலங்கையில் தனிநாடு கோரி, விடுதலைப் புலிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்துடன் போராடி வருகிறது.

இந்நிலையில், இருதரப்புக்கும் இடையே, சமீபகாலமாக கடும் சண்டை நடந்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமையும், திங்கள் கிழமையும வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இருதரப்புக்கும் இடையே  கடந்த சண்டையில் விடுதலைப் புலிகள் 19 பேரும், ராணுவத்தினர் இருவரும் கொல்லப்பட்டனர், என ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடற்புலிகள் 40 பேர் பலி

இதற்கிடையே,  இலங்கையின் வடமேற்கே, நெடுந்தீவு கடல் பகுதியில், புலிகளுக்கு சப்ளை செய்வதற்காக ஆயுதங்களை ஏற்றி இந்த 16 படகுகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது கடற்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இதில், கடற்புலிகள் 4 பேர் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையில் வெள்ளம் : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு


 கொழும்பு : கனமழை காரணமாக இலங்கையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கிழக்கு நகரமான மட்டக்களப்பு மற்றும் இலங்கையில் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பயங்கர வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

இதனால், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

மட்டகளப்பு பகுதியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர். இவர்கள், கல்வி நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், இலங்கை இது போன்ற கோர நிகழ்வை ஆண்டு தோறும் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code