அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்னை சங்கமம்'08 ஆரம்பம்
Thursday, 10 January 2008
 வாகனங்களின் ஒலிப்பான் இரைச்சல், போக்குவரத்து நெரிசல், நிற்கவும் நேரமில்லாமல் அங்கும் இங்குமாக சுழன்று கொண்டிருக்கும் இன்றைய இயந்திரத்தனமான சென்னை வாழ்க்கையில், நாகரீகம், கால மாற்றம் என்ற போர்வையில் கலாச்சார சீர்கேட்டை நோக்கிச் வேகமாக முன்னேறும் நம் மக்களிடையே, நாட்டுப்புறக் கலைகளும், நல்ல நாகரீகமும் இன்னும் அழிந்து விடவில்லை என்பதை நினைவுபடுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த 'சென்னை சங்கமம்'.

தமிழ்மையத்தின் உதவியாலும், முதல்வர் கருணாநிதியின் மகளும் எம்பியுமான கனிமொழியின் முயற்சியினாலும் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது இந்த கலைவிழா.

நலிந்து கிடந்த நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு ஊக்கவும், உத்வேகமும், புத்துணர்ச்சியும் கொடுக்கும் பானமாகவே இந்நிகழ்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக மக்களிடையே இந்த விழாவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

மக்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்ட இந்த கலைவிழாவின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம் இன்று(10-01-08) கோலாகலமாய்த் துவங்குகிறது

'திருவிழா நம்ம தெரு விழா' என்ற வாசகத்துடன் 2வது முறையாக சென்னைவாழ் மக்களை குஷிப்படுத்த தயாராகிவிட்டது சென்னை சங்கம டீம்.

சுமார் ஒரு வார காலம் நடைபெறும் இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.

இதுகுறித்து சென்னை சங்கமம் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை சங்கமம் திருவிழாவை சென்னை, அடையாறில் உள்ள ஐஐடி வளாகத்தில் இன்று மாலை 6-30 மணிக்கு முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலா, கலாச்சார துறையுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக பாரம்பரிய உணவையும் சேர்த்துள்ளோம். பல வகையான உணவுகளை பாரம்பரியமாகத் தயாரித்து வழங்கும் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

தொடக்கவிழாவில் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கவிஞர்கள் அறிவுமதி, கபிலன் ஆகியோர் பாடல் எழுத பால் ஜோசப் இசையமைத்துள்ள 'ஞாயிறு போற்றுதும்' என்ற இசை, நடன நிகழ்வு நடத்தப்படுகிறது.

'குழந்தைகளின் பார்வையில் இயற்கை, சுற்றுச் சூழல்' என்ற வகையில் இருக்கும் இந்த நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரம் நடக்கும்.

கடந்த வருடம் 600 கலைஞர்கள் தான் பங்கேற்றனர். ஆனால் இந்த வருடம் 1,500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

எங்களால் பயிற்றுவிக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பங்கேற்கிறார்கள். கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

நிறைவு நாளன்று பெசன்ட் நகரில் சென்னை சங்கமத்தில் பங்கேற்ற கலைஞர்களின் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. நாட்டுப்புற கலைஞர்களுக்கு 1 மணி நேரத்தில் அவர்களின் கலை வடிவங்களை நிகழ்த்திக் காட்டுவது எப்படி. கிடைத்த ஊதியத்தை சேமிப்பது எப்படி போன்ற பயிற்சிகள் அளித்துள்ளோம்.

கவிஞர்கள் சந்திப்பு, பட்டிமன்றம், இலக்கிய விவாதங்கள் உள்ளிட்டவை தமிழ் சங்கமம் என்ற தலைப்பில் நடைபெறும்.

நாட்டுப்புறக் கலைகளுக்கான ஒரு நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்கு எவ்வளவு காலம் ஆகும் எனத் தெரியவில்லை

இவ்வாறு கனிமொழி கூறினார்.

இந்த ஆண்டு சென்னை சங்கமம் திருவிழாவை நேரடியாக இணையதளத்தில் பார்ப்பதற்கு www.anytimechennai.com என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது

மறைத்து வைக்கப்பட்ட கலைகளையும், இளைய தலைமுறையால் மறுக்கப்பட்ட பண்பாட்டையும் எதிர்கால சந்ததியினர் ரசிக்கவும், ருசிக்கவும் இது போன்ற கலைவிழா பெரும் உதவியாக என்பதில் ஐயமில்லை.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code

 

சென்னை சங்கமம் '07 தொகுப்பு

நன்றி : தமிழக சுற்றுலாத்துறை