அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அஹிம்சாமூர்த்திக்கு ஆலயம்
Friday, 26 October 2007



-பிரமிளா எம்.கே-

திரை நட்சத்திரங்களுக்கு கோவில் கட்டும் நம்மூரில் மகாத்மா காந்திக்கு கோவிலா... என கேள்விப்பட்டு ஆச்சர்யம் அகலாமல் அவர்கள் கூட்டிச் சென்ற இடத்தை நோக்கி நாமும் சென்றோம்.



எங்கே தெரியுமா! குஜராத்தின் போர்பந்தருக்கு அல்ல. மகாத்மாவையும், அவரது மனித நேயத்தையும் கொஞ்சமும் மறக்காத மண்ணாம் செந்தாம்பாளையத்திற்கு. ஈரோடு மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 25 கி.மீ.,தொலைவில் இருக்கிறது இந்த செந்தாம்பாளையம்.

குறிப்பிட்ட அந்த இடத்திற்குச் சென்றோம். விழாக்கோலம் பூண்டிருந்தது செந்தாம்பாளையம். ஒன்றுமே விளங்கவில்லை எங்களுக்கு! அப்போது...

காந்தி சாமிக்கு ஜே, மகாத்மா வாழ்க, என கதர் ஆடையில் ஊர் பெருசுகள், பொதுமக்கள், சிறுவர்கள், என அணிவகுத்து முழக்கமிட்டு, கைகூப்பி தீப ஆராதனை முடிந்து அபிகேகம் நடைபெறுகிறது. மூலவராய் வீற்றிருக்கும் காந்தி சிலைக்கு. அவரது சிலைக்கு எதிரே கருணை பொங்க வீற்றிருக்கிறார் மனைவி கஸ்தூரிபாய். அப்போதுதான் புரிந்தது! அடடே இன்று அக்டோபர் 2. மாமனிதர் மகாத்மா காந்தியின் பிறந்ததினம்.

அசந்தே போய்விட்டோம். தீபாவளி, பொங்கல் என பண்டிகைகளை பரவசமாய் கொண்டாடும் நம் மக்களிடையே, மகாத்மாவை மாணிக்கமாய் மனதாரப் போற்றும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இங்கே நாம் தெரிந்து கொண்டோம்.

ஒவ்வொரு ஆண்டும், காந்தி ஜெயந்தியன்று ஊர் மக்கள் கூடி பொங்கல் வைத்து சிறப்புப் பூஜை செய்து காந்தி சாமியை சாதி மதப் பேதமின்றி வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த கோயில் உருவானதன் பின்னணிதான் என்ன...?

பள்ளிப் பருவத்தில் காந்தியால் கவரப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் செந்தாம்பாளையத்தைச் சேர்ந்த வையாபுரியும் ஒருவர். சிறுவயதின் காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடியாத வையாபுரி, காந்தியத்தையும், அதன் கொள்கைகளையும் ப்ரப்பத் துவங்கினார்.

காலமும், வயதும் கைகொடுக்க தனது 60வது வயதில் காந்தி அறக்கட்டளை என்ற பெயரில் நிதிதிரட்டி 1997ல் காந்தி கோவிலை கட்டி முடித்து கும்பாபிகேகமும் நடத்தினார்.

அன்று முதல் தினமும் 3 கால பூஜை. காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விசேக நாட்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானமும் நடைபெறுகிறது.

பூஜை முடியும் வரை காத்திருந்தோம். பூஜை முடிந்து வெளியே வந்த கதராடைக் கூட்டத்தில் வையாபுரி எனும் வைரத்தை தேடினோம்.

கிராம மக்களிடம் காந்தியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே காந்தியைக் கடவுளாக்கி கோவில் எழுப்பி உள்ளோம். இந்தக் கோவிலில் விநாயகர், ஆஞ்சநேயர் நவகிரகங்கள் அமைத்து காந்தியை மூலவிக்ரகமாக்கி உள்ளோம்.

நம்பிக்கையுடன் இங்கு சாமி கும்பிட வருவோர், எளிதில் காந்திய சிந்தனைகளை உணர்ந்து கொள்ள முடியும். நம் நாட்டில் மீண்டும் காந்தியம் மலர வேண்டும். அதற்கு செந்தாம்பாளையம் காந்தி கோவில் ஒரு மைல் கல்லாய் அமையும், என் உணர்ச்சி பொங்க பேசினார் துணி வியாபாரம் செய்யும் வையாபுரி.

தீர்ந்து போன காந்தியத்தின் மிச்சமாய் ரூபாய் நோட்டுகளில் மட்டுமே காணக்கிடைக்கும் காந்தி, கையில் சுதந்திரக் கொடிதாங்கி புன்னகை பொங்க நிற்கிறார் இங்கே கடவுள் உருவாக.

இது போன்ற எத்தனையோ வையாபுரிகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சத்தம் இல்லாமல் மவுனமாய் அகிம்சை யுத்தமே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை அரசு தேடித்துடைத்தெடுத்து அவர்களின்  கனவுகளை மெய்ப்படச் செய்ய முன்வர வேண்டும். முன் வருமா...?




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code