அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்ற வார உலகம் : 19-01-08
Monday, 21 January 2008

இந்தியர்களை வெளியேற்ற மலேசியா திட்டம்


 கோலாலம்பூர் :  மலேசியாவில் பணிபுரிந்து வரும் இந்தியர்களில் 2 லட்சம் பேரை, தாய்நாட்டிற்கே திருப்பி அனுப்ப மலேசிய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தங்களது சொந்த நாட்டு பிரஜைகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் மலேசிய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இம்மாத துவக்கத்தில் இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்தும்படி மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை அந்நாட்டு அமைச்சர் பின்னர் மறுத்திருந்தார்.

ஆனால் எந்த ஒரு வெளிநாட்டவருக்கும் மலேசியாவில் ஐந்தாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக தங்கியிருந்து பணி புரிவதற்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட மாட்டாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்துடன், உள்ளூர்வாசிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்கி அவர்களை பணியமர்த்துமாறு தொழில் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பெனாசிர் படுகொலை : சிறுவன் கைது


இஸ்லாமாபாத் :   பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இஸ்லாமாபாத்திலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐடெஷாஸ் ஷா என்ற அந்த சிறுவன், தன்னை தாலிபான் ஆதரவு தீவிரவாத இயக்கமான தெஹ்ரிக் - இ - தாலிபான் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவன் என போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளான்.

அந்த இயக்கத்தின் தலைவன் பைதுல்லா மசூத் என்பவன்தான் தன்னை பெனாசிரைக் கொல்வதற்காக அனுப்பி வைத்ததாகவும் அவன் கூறியுள்ளான்.

பெனாசிரை கொல்ல தன்னுடன் சேர்த்து 5 தற்கொலை தீவிரவாதிகள் அனுப்பப்பட்டதாகவும்,அக்ரம் மற்றும் பிலால் ஆகிய இரண்டு பேர்தான் முதலில் பெனாசிருக்கு குறி வைப்பது என்றும்,அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டால் மீதமுள்ள 3 பேர் அதனை செய்து முடிப்பது என்றும் திட்டமிட்டிருந்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

ஆனால் டிசம்பர் 27 ம் தேதியன்று பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பூட்டோவை, பிலால் சுட்டுக் கொன்றதோடு, தான் கட்டியிருந்த வெடிகுண்டையும் வெடிக்கச் செய்ததாக அச்சிறுவன் கூறியுள்ளான்.

மேலும் மற்ற 2 தற்கொலை தீவிரவாதிகளும் எங்கு தலைமறைவாக உள்ளனர் எனபது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவன் மேலும் கூறியுள்ளதாக அல் - ஜஸீராவுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிகோலஸ் பர்னஸ் ராஜினாமா


 வாஷிங்டன் : அமெரிகாவின் அரசியல் விவகாரத்துறை அமைச்சர் நிகோலஸ் பர்னஸ் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அந்நாட்டு அமைச்சர் தனது சொந்த  காரணங்களுக்காக வரும் மார்ச் மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இவரது ராஜினாமாவை வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

அப்போது, இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வரை பர்ன்ஸ் பணியில் இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.  முடிந்தால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உழைப்பதாக பர்ன்ஸ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

லூசியானா கவர்னரானார் பாபிஜிண்டால்


வாஷிங்டன்: அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் கவர்னராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால் பதவியேற்றார்.

அமெரிக்காவில், மாகாண கவர்னர் பதவி, நம் மாநில முதல்வர் பதவிக்கு ஈடானது. முதல்வருக்கு உள்ள எல்லா அதிகாரங்களும் மாகாண கவர்னருக்கு உண்டு. மாநில நிர்வாகம் முழுவதும் அவர் கட்டுப்பாட்டில் தான். அதிபர் புஷ் சார்ந்த குடியரசு கட்சியை சேர்ந்த ஜிண்டால், அமெரிக்காவிலேயே மிகச் சிறிய வயது கவர்னர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

ஜிண்டால் பெற்றோர் அரியானா மாநிலத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஜிண்டால், படித்ததெல்லாம்  மெரிக்காவில் தான்.

அவர் மனைவி சுப்ரியா , டில்லியை சேர்ந்தவர். அமெரிக்காவில் தொழிலதிபராக உள்ள ஜிண்டால், ரசியலிலும் குதித்தார். கவர்னராக பொறுப்பேற்ற ஜிண்டால் பேசுகையில், லூசியானா மாகாணத்தில், கத்ரினா சூறாவளிப்புயல் பாதிப்பு மூலம் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டுள்ளனர். இந்த மாகாணத்தை, அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்' என்று உறுதி அளித்தார்.

ஜிண்டால் பேச்சு , அமெரிக்க பத்திரிகையாளர்களை கவர்ந்தது. அவர் பேசும் போது,` நமது மாகாணம் ஏழ்மையானதோ,   பொருளாதாரத்தில் பின் தங்கியதோ அல்ல; நம் தலைவர்கள் தான் போதுமான அனுபவம் இல்லாமல் இருந்தனர். அதனால் தான் இன்னமும் நம் மாகாணம், பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறது' என்று சுட்டிக்காட்டினார்.

இலங்கை குண்டு வெடிப்பு : ஐ.நா., கண்டனம்


 நியூயார்க் :  இலங்கையில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கண்ணி வெடித்தாக்குதலுக்கு ஐ.நா.,பொதுச் செயலர் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் வியாழக்கிழமை காலை ஓடும் பஸ்சை குறிவைத்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 26 பேர் பலியாயினர்.

இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல் சம்பவம், இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த அதேசமயத்தில் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைப் பிரச்சனைக்கு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலமாகவே சுமூகத் தீர்வு காணமுடியும் என்று பான் கி மூன் வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கலீதா ஜியா ஜாமீனில் விடுவிப்பு


தாகா : ஊழல் புகாரில் கைது செய்யப் பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  
.
அவரது தாயார் தாயீபா மஜூம்தார் காலமானதை தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக  கலிதா ஜியா பரோலில் விடுவிக்கப்பட்டிருப்பதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜியாவுடன்  கைது செய்யப் பட்டுள்ள அவரது 2 மகன்களும் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 87 வயதாகும் மஜூம்தார் நெஞ்சுவலி காரணமாக நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஜியா மற்றும் அவரது மகன்கள்  10 மணி நேரத்திற்குள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்படுவதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கலிதா ஜியா  தனது தாயார் உடலுக்கு  அஞ்சலி செலுத்த வசதியாக மஜூம்தாரின் உடல் தினாஜ்பூரிலிருந்து  டாக்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code