இலங்கை ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையேயான போர் கடந்த வாரம் தீவிரமடைந்தது. இருதரப்பும் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக சென்ற வாரத்தில் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருப்பதாக நம்பப்படும் பதுங்கு குழிகள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது. இந்த சம்பவத்தில் பிரபாகரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
பிராபகரன் பதுங்குகுழிகள் மீது தாக்குதல்
கொழும்பு : விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருப்பதாக நம்பப்படும் பதுங்குகுழிகள் ஒன்றின் மீது இலங்கை ராணுவம் விமானம் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது.
இது குறித்து இலங்கை ராணுவம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
புலிகளின் முக்கிய மையமான கிளிநொச்சியின் கல்மாதுகுளம் என்ற பகுதியில் விமானப்படையினர் சிறப்பு வகை குண்டுகளை(Low diving mission bombing) வீசி தாக்குதல் நடத்தினோம்.
இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்தது. விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரன் பதுங்கி இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பகுதிகளில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளோம்.
மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள புலிகளின் மையத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பிரபாகரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார் என்று ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், இந்த செய்தியை புலிகள் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை. அது பிராபகரன் உள்ள பதுங்கு குழிகள் மீது இல்லை, எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை அதிபர் ராஜபக்சே, விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரன் பிடிபட்டால், இந்திய அரசிடம் ஒப்படைப்போம், என்றார்.
ஈராக்கில் தற்கொலைப் படைத் தாக்க ுதல் திக்ரித் : பாக்தாத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 18 பேர் பலியாயினர்.
ஈராக்கில் சதாம் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்க படைகளுக்கும் தீவிரவாத இயகக்த்தினருக்கும் அடிக்கடி மோதல் நடப்பது வாடிக்கையாகி விட்டது. கொலை நகரமாக பாக்தாத் உருவெடுத்துவிட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு உயரதிகாரி ஒருவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூர தற்கொலைப் படைத் தாக்குதலில் 18 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலந்தில் ராணுவ விமான விபத்து
வார்சா : போலந்து ராணுவ விமானம் ஒன்று காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளாகியது. இதில் 20 பேர் பலியாயினர்.
இது குறித்து அந்நாட்டு பிரதமர் டொனால்டு டஸ்க் கூறுகையில், வார்சாவில் நடந்த போர் பயிற்சியில் கலந்து கொண்ட ராணுவ விமானம் 20 பேருடன் தரையிறங்கும் வேளையில் காட்டுப்பகுதியில் வழி தெரியாமல் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் உயரதிகாரி ஒருவர் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
போலந்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிகக் கொடூரமான விபத்து இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் விரும்பினால் ராஜினாமா : பர்வேஸ் டாவோஸ் : 'எனது தலைமையை மக்கள் விரும்பவில்லை எனில் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயார்' என பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். 
உலகப் பொருளாதார கூட்டமைப்பில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அதிபர் முஷாரப் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
நான் ஆட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டாம், இந்நாட்டிற்கு எனது பங்களிப்பை அளிக்க வேண்டாம், என மக்கள் விரும்பினால் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.
ஒருவர் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது. நாட்டில் ராணுவத் துறையினர், தொழிலதிபர்கள், சமுதாயத்தைச் சேர்ந்த பொது மக்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் கருத்துக்கள் வரட்டும். இவ்வாறு கூறினார்.
கருணாவுக்கு சிறைத் தண்டனை
லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணாவுக்கு போலி பாஸ்போர்ட் வழக்கில் 9 மாத சிறைத் தண்டனை விதித்து லண்டன் கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் அதிபர் ராஜபக்சேவின் தம்பிதான் தனக்கு போலி பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்ததாக நீதிமன்றத்தில் கருணா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் கர்னல் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன். கடந்த 2004ம் ஆண்டு பிரபாகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் கருணா. பின்னர் அங்கிருந்து பிரிந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற புதிய குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்தார்.
இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கருணாவைப் பயன்படுத்தி இலங்கை படைகள், கிழக்கில் உள்ள பல பகுதிகளைப் பிடித்தன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கருணா இலங்கையிலிருந்து தப்பி லண்டன் சென்றார். நவம்பர் மாதம் லண்டன் புறநகர்ப் பகுதியான கென்சிங்டனில் உள்ள தனது அலுவலகத்தில் கருணா இருந்தபோது அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் மீது மேற்கு லண்டனில் உள்ள ஐஸில்வொர்த் கிரவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 24ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தனது குற்றத்தை கருணா ஒப்புக் கொண்டார். விரிவான வாக்குமூலத்தையும் அளித்தார்.
இதையடுத்து சமீபத்தில் அவரைக் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
நீதிபதி மெக்டோவல் கருணாவுக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். தீர்ப்பை முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக கேட்டார் கருணா.
ஏற்கனவே அவர் சிறையில் இருந்த 32 நாட்கள் போக மீதி உள்ள காலத்தை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
'போலி பாஸ்போர்ட் கொடுத்தவர் ராஜபக்சே தம்பி'
இதற்கிடையை நீதிமன்றத்தில் கருணா அளித்துள்ள வாக்குமூலத்தில், அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சேதான் தனக்கு போலி பாஸ்போர்ட் கொடுத்ததாக கூறியுள்ளார் கருணா.
அவர் கொடுத்த வாக்குமூலத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாசித்தார். அதில் கருணா கூறியிருப்பதாவது:
நான் இங்கிலாந்துக்கு போலி பாஸ்போர்ட் மூலம் வர முக்கிய காரணம் கோத்தபயா ராஜபக்சேதான். நான் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்தது முதல் கோத்தபயாவை எனக்கு நன்கு தெரியும்.
நான் போலி பாஸ்போர்ட் மூலம் இங்கிலாந்துக்கு வந்தது இங்கிலாந்து சட்டத்தின்படி தவறுதான். இருப்பினும் இந்த பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்தது இலங்கை அரசுதான். அதுதான் எனக்கு பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பியது.
நான் விமானத்தில் ஏறிய பிறகுதான் என்னிடம் பாஸ்போர்ட்டே வழங்கப்பட்டது.நான் அரசு அதிகாரி இல்லை என்ற போதிலும் எனக்கு இலங்கை அரசு முழு பாதுகாப்பு கொடுத்து காத்து வந்தது என்று கூறியுள்ளார் கருணா.
கருணாவின் இந்த பரபரப்பு வாக்குமூலத்தை இலங்கை அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கூறுகையில், கருணா இங்கிலாந்து செல்ல இலங்கை அரசு எந்த வகையிலும் உதவவில்லை. பாஸ்போர்ட் எடுத்துத் தரவும் இல்லை என்றார்.
சர்வாதிகாரி சுகர்தோ மரணம் சோலோ : இந்தோனேசியாவின் முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான சுகர்தோ உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக் கிழமை மருத்துவமனையில் மரணமடைந்தார். இவருக்கு வயது 86.
சுகர்தோ, ராணுவ தளபதியாக இருந்த இவர் கடந்த 1966ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் இந்தோனேசிய ஆட்சியைப் பிடித்தார்.
32 ஆண்டு காலம் இவரது பிடியில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்து வந்தது.தன்னை எதிர்த்தவர்களையும், தனது கொள்கைக்கு மாறாக செயல்பட்டவர்களையும் கொன்று குவித்தார் சுகர்தோ.
கம்யூனிச கொள்கைக்கு எதிராகச் செயல்பட்ட இவர், தன்னை எதிர்த்துப் போராடிய சுமார் ஐந்து லட்சம் கம்யூனிஸ்ட்டுகளை படுகொலை செய்தார். அவரது ஆட்சியில் இது போன்ற எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் தலைவிரித்தாடின. மேலும் இவரது குடும்பத்தினரை கோடிக்கணக்கில் ஊழல் செய்ய அனுமதித்தார் என்றும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதன் காரணமாக எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக கடந்த 1998ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது உடல்நிலையைக் காரணம் காட்டி இவர் மீது எந்த வழக்கிலும் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் கடந்த 4ம் தேதி சுகர்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 23 நாட்களாக உயிருக்கு போராடி வந்த சுகர்தோவின் உயிர் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 1.10 மணிக்கு பிரிந்தது.
இதனை அரசு மற்றும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
|