|
ஆண் திருமண வயது குறைப்பா?
|
|
Thursday, 07 February 2008 |
|
இந்தியாவில், தற்போது ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் இருக்கிறது. ஆண்களுக்கான திருமண வயதை 21ல் இருந்து 18 ஆக குறைக்க வேண்டும் என சட்டகமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
இந்து திருமணம் மற்றும் சொத்துரிமைச் சட்டம், இந்திய குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யுமாறு சட்ட ஆணையத்தை மத்திய அரசு சமீபத்தில் கேட்டுக் கொண்டது.
இதனை ஏற்றுக் கொண்ட சட்ட ஆணையம், நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையில் குழு அமைத்து, தங்களது பரிந்துரைகளை அறிக்கைகளாக மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
ஆண்களின் திருமண வயதை 18 ஆகக் குறைப்பதன் மூலம் குழந்தைத் திருமணத்தை தடுக்க முடியும், என்று இந்தக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 18 வயதுக்கு முன்பாக ஆண் மற்றும் பெண் திருமணம் செய்ய தடை விதிககவும் இது பரிந்துரைக்கிறது.
15 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது கற்பழிப்பு குற்றம் என்பதை 16 வயது என திருத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனைவியே ஆனாலும், அவரது விருப்பம் இன்றி உடலுறவு கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறது.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் 16 முதல் 18 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டாலும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும். முறையான திருமணத்தை கட்டாய பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட 11 வயது சிறுமி புல்மோனியுடன் அவரது கணவர் கட்டாய உறவு வைத்துக் கொண்டார் இதனால், அக்குழந்தை இறந்தது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கைத் தொடர்ந்து மக்களிடையே எழுந்த கருத்தை அடிப்படையாக வைத்து இந்தப் பரிந்துரைகள் மத்திய அரசின் முன் வைக்கப்பட்டுள்ளன, என சட்டக் கமிஷன் உறுப்பு செயலர் சர்மா தெரிவித்தார்.
சொத்துரிமை சட்டம் தொடர்பாக, 'பெற்றோர் உயிருடன் இருக்கும் பட்சத்தில், பிள்ளை இறந்துவிட்டால் அவருடைய சொத்தைப் பெறுவதில் மனைவி, தாய் ஆகியோரைப் போலவே தந்தைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.இதனால், முதியோர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும்' என்றும், பெற்றோரின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை வழங்குவதில் விதிவிலக்கு இருக்கக் கூடாது என்றும் சட்டக்கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
|