|
சமூக சேவகர் பாபா ஆம்தே காலமானார்
|
|
Saturday, 09 February 2008 |
|
சந்திராபூர் : பிரபல சமூக சேவகரும் மகசேச விருதை வென்றவருமான பாபா ஆம்தே இன்று காலை காலமானார். இவருக்கு வயது 94.
தொழுநோய் எனும் கொடிய நோயால் துன்புற்று நலிந்தவர்களுக்கு அன்பு செலுத்தி ஆதரவு தந்தவர்தான் முரளிதர் தேவிதாஸ் ஆம்தே என்ற பாபா ஆம்தே.
தனது இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த இந்தச் சூரியன் இன்று(சனிக்கிழமை) 4.15(இந்திய நேரப்படி) மணிக்கு அஸ்தமித்தது.
மிக வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்த ஆம்தே நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து முடித்தவுடனேயே ஏழை மக்களுக்காக வழக்குகளில் இலவசமாக வாதாட ஆரம்பித்தார்.
தொழுநோயாளிகள் படும் இன்னல்கள் கண்டு கலங்கிய ஆம்தே அவர்களுக்காக மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் ஆசிரமம் அமைத்தார். அவரை தொழுநோயாளிகள் பாபா ஆம்தே என அன்புடன் அழைக்க ஆரம்பித்தனர்.
ஆசிரமத்தில் தொழு நோயாளிகளுக்காக இலவசமாக மருத்துவமனையையும் அமைத்து அவர்களுக்கு முழு நேரமும் சேவை செய்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தொடர்ந்து ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பாடுபட்டு வந்தார். இந் நிலையில் இன்று அதிகாலை ஆசிரமத்திலேயே இயற்கை எய்தினார் இவரது மறைவிற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இரங்கல் தெரிவித்துளளனர்.
காந்தியத்தையும், அதன் சிந்தனைகளையும், மக்களிடையே பரப்புவதோடு மட்டுமில்லாமல் அவ்வழியே வாழ்ந்து காட்டியவர் அமிதி, என ஜனாதிபதியும், பிரதமரும் தங்களது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
|