அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
...ஆதலினால் காதல் செய்வீர்!
Wednesday, 13 February 2008

காதலினால் மானிடர்களுக்குக் கவிதை உண்டாம்
சிற்பம் முதல் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர்! என்றான் பாட்டுக் கொரு புலவன் பாரதி.

பாரதி மட்டுமல்ல, பகுத்தறிவு பகலவன் பெரியார், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் காதலின் மகத்துவம் பற்றி பேசியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் இந்த காதலர் தினத்தை புனித தினமாகக் கொண்டாடி புளங்காகிதம் அடைகின்றன இன்றைய இளைய சமுதாயம். மறுபுறம் காதல் ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் மேலை நாட்டினர் ஊற்றி வரும் ராஜதிராவகம் என மனம் கொதிக்கின்றனர்.

அன்னையர் தினம், மனைவியர் தினம், பக்கத்து வீட்டுக்காரன் தினம் என எல்லா தினங்களையும் விட காதலர் தினத்தில் மட்டும் என்ன அப்படி ஓர் கலாச்சார சீரழிவை கண்டுவிட்டீர்கள் என்று ஏகமாய்க் கோபித்துக் கொள்கின்றனர் இளைஞர்கள்.

மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்வதைத் தான் வரவேற்க முடியவில்லை.

வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளவதற்காக மேலை நாட்டினர், தந்திரமாகக் கையாண்டதுதான் இந்த வியாபார யுக்தி என்பதை எத்தனை பேர் அறிவர். இருக்கும் நாளெல்லாம் ஏதாவது ஒரு தினமாக கொண்டாட வைப்பதுதான் அவர்களது திட்டம்.

குறிப்பிட்ட அந்த தினத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு  ஏதாவது ஒரு பரிசுப் பொருளை வழங்கியே ஆக வேண்டும், இல்லையெனில் அதைவிட  பாவம் வேறொன்றுமில்லை எனும் அளவுக்கு  ஒரு மாயத் தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திரசாலிகள் அவர்கள்.

இந்த இயந்திர வாழ்கையில் முதலாளிகளின் தந்திரத்தை புரிந்து கொள்ளாமல் வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள், சாக்லேட்டுகள் என கரன்சிகளை வீண் காதிகங்கள் பறக்க விடுகின்றனர்.

நிகழ்வதெல்லாம் நம்முடைய முழு விருப்பத்தின் பேரில் நடைபெறுவது போன்றதொரு தோற்றத்தை நம்மிடையே திணித்து விடுவதுதான் அவர்களது வெற்றி.

காதலர் தினத்தின் போது ஏதாவது ஒன்றை வாங்கிய ஆக வேண்டுமென்று காதலர்கள் பலவந்தப்படுத்தப்படுகிறார்கள்.

உணவகங்கள், கடைகள் எங்கு பார்த்தாலும் சிவப்பு நிற இதய வடிவ பலூன்களும், மன்மதன் அம்புடன் நிற்கும் படங்களும், பூக்களும் தான். இவையெல்லாம் காதலின் சின்னங்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. பல சிறப்பு உணவுகள் காதலர் தினத்துக்கென்றே தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பல காதலர் தின திட்டங்களும் உள்ளன. சிறிய அளவில் ஆரம்பித்து இரண்டு கோடி ரூபாய் வரை செலவில் இவை நடைமுறையில் உள்ளன. ஹெலிகாப்டரில் சுற்றுதல், மிக மிக ஆடம்பர உணவகத்தில் உணவு, அரச மரியாதை என பணத்தை உறிஞ்சும் திட்டங்கள் அவை.

காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.

பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து …. கம்ப ராமாயணத்தில் கம்பரின் கவித்துவம் கவியும் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகூட்டுவதாய் விளங்குகிறது. காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் மலர்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் இலக்கியவாதிகளும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கு இன்று வெகுவாய் பரவி வருகிறது. இன்றைய தினத்தின் போது, இந்தோனேசியாவில் பதிவுத் திருமண அலுவலகம் நிரம்பி வழியுமாம்.

காதலைச் சொல்வதற்கும் காதல் திருமணங்கள் செய்து கொள்வதற்கு, தனது பழைய காதலை நினைத்து புலம்புவதற்கென்று தனியாக ஒருநாள் அவசியம் தானா...? உலகமே போற்றும் உன்னதமான நமது கலாச்சாரத்தை அழித்து பாழ் படுத்தும் மேலை நாட்டு மேற்கத்திய பாணியால் என்ன நன்மை...?. உள்ளத்தால் நேசிக்கும் உன்னதக் காதலைச் சொல்ல காலம் நேரம் தேவையில்லை. பிப்.14 காதலர் தினம் என்றால், வருடத்தின் மீதமுள்ள 364 நாட்களில் காதல் பேசப் போவதில்லையா...காதல் பரிமாற்றம் ஏதும் இருக்காதா...?

உதிரம் சிந்தி உழைப்பதெல்லாம், உண்டு கொழுக்கும் வர்த்தகர்களுக்கா... இளைஞர்களே சிந்தியுங்கள்!

உணர்வுகளைப் பரிமாறி உயிரோவியமாய் வாழும் காதலர்களுக்கு எல்லா நாளும் காதலர் தினமே! ஆதலினால் காதல் செய்வீர் எந்நாளும்!




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code