அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்ற வார உலகம் 23-02-08
Saturday, 23 February 2008

பாகிஸ்தானில் ஓட்டுப் பதிவு


 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட  பார்லிமென்ட் தேர்தல் கடந்த 18ம் தேதி பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே நடந்தது.

பாகிஸ்தான் பார்லிமென்ட் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 342. இவற்றில் 269 தொகுதிகளில் மட்டும்தான் தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில் பெனாசிரின் கணவர் ஆசிப் ஷர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் க்யூ கட்சி, உள்ளிட்ட ஐந்து கட்சிகள் முக்கிய போட்டியாளர்களாக களத்தில் போட்டியிட்டனர்.

தேர்தல் அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதற்காக பெருமளவில் ராணுவம் குவிக்கப்பட்டும், ஓட்டுப் பதிவின் போது குண்டு வெடிப்பு, தற்கொலைப் படைத் தாக்குதல் என வன்முறை வெறியாட்டம் இடம் பெறத் தவறவில்லை.

இதன் உச்சகட்டமாக,  பஞ்சாப் மாகாண பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ் ஷெரீப்) கட்சியின் வேட்பாளர் மர்ம நபர்களால் துப்பாகியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தகைய பதற்றமான சூழலில் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து 18ம் தேதி மாலையில் இருந்தே ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.  19ம் தேதியன்று காலையில் இருந்தே முடிவுகள் வெளிவரத் துவங்கின.

 

 

 

முஷாரப் ஆதரவு கட்சி படுதோல்வி


தேர்தல் முடிவுகளின் படி  பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 87 இடங்களையும், நவாஸ் ஷெரீப் கட்சி 66 இடங்களையும் கைப்பற்றியது. அதிபர் முஷாரப் ஆதரவுக் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(க்யூ) 38 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

இதனால், எந்தக் ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், கூட்டணி அமைத்து ஆட்சிக் கட்டிலில் அமரத் திட்டமிட்டனர் நவாஸ் ஷெரீப்பும், சர்தாரியும் கட்சியினரும். கூட்டணி ஆட்சி குறித்து,  முன்னாள் பிரதமர் நவாஸ்
ஷெரீப், பெனாசிர் பூட்டோவின் கணவர் ஜர்தாரியும் 21ம் தேதி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.

இதற்கிடையே, ' கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் நிலையில், பிரதமர் பதவியில் தான் அமரப் போவது இல்லை, என சர்தாரி' தெரிவித்தார்.

 புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பார்லிமென்டில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அதிபர் முஷாரப்பையும் பதவி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தேர்தல் வெற்றி குறித்து நிருபர்களிடம் கூறிய நவாஸ் ஷெரீப், " பாகிஸ்தானிஸ் அவசரநிலை பிரகடனப்படுத்தியல் இருந்து அதிபரால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை நாங்கள் எதிர்த்தே வருகிறோம். இவை யாவும் திரும்பப் பெறப்படும். பதவி நீக்கம்
செய்யப்பட்ட தலைமை நீதிபதி இப்திகார் சவுத்திரி மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார். நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட்டால்தான் உண்மையான ஜனநாயகம் மலர முடியும், " என்றார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர், நவாஸ் ஷெரீப் மற்றும் சர்தாரி கட்சி கூட்டணி இணைந்து ஆட்சி அமைப்பது என ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

 

பதவி விலகும் எண்ணம் இல்லை : முஷாரப்


இதற்கிடையே,  புதிய அரசுடன் நல்லிணக்கத்துடன் செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.  தேர்தல் தோல்விக்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்த முஷாரப் கூறுகையில்,'  அதிபர் பதவியில் இருந்து விலகும் எண்ணமில்லை, ஜனநாயக நடைமுறைக்கு திரும்பியுள்ள பாகிஸ்தானை, அதிபர் என்ற முறையில் வழிநடத்தி செல்ல தயாராக இருக்கிறேன.

 

தற்போது மக்கள் தேர்வு செய்துள்ள அரசை நடத்தும் பொறுப்பு புதிய பிரதமருக்கு உள்ளது. அவருடன் இணைந்து பணியாற்றுவது மட்டுமே தமது பணி, புதிய அரசை வழிநடத்தி செல்வது அதிபரின் பொறுப்பல்ல என்றார்.

 

பெனாசிர் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமர்


கூட்டணி ஆட்சி மற்றும் கூட்டணி கோட்பாடுகள் குறித்தும், பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பது குறித்தும் நவாஸ்  ஷெரீப்பும்,  சர்தாரியும் மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து, பெனாசிர் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமராவது என்று ஒருமனதாக பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் மக்தூம் அமின் ஹீமோவுக்கு பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்றே கருதப்படுகிறது. 

 

சுட்டு வீழ்த்தப்பட்டது அமெரிக்கா உளவு விமானம்


 வாஷிங்டன் :  பூமிக்கு பேராபத்தை விளைவிக்கும் என அஞ்சப்பட்ட அமெரிக்க உளவு செயற்கை கோளை பசுபிக் கடல் பகுதியில் அமெரிக்கா ஏவுகணை சுட்டு வீழ்த்தியது.

சர்வதேச நாடுகளைக் கண்காணிக்கும் உளவு செயற்கை கோளை அமெரிக்கா விண்ணில் ஏவியது. இந்த செயற்கை கோள்  தனது சுற்று வட்டப் பாதையில் சரியாகப் பொருந்தால் விலகிச் சென்றது. சில நாட்களில் இது  பூமியை நோக்கி இது இறங்கி வந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இது பூமியில் எங்காவது விழுந்து வெடித்தால், அதிலுள்ள ஹைட்ரசீன் எனும் விஷ வாயு பரவி பெரும் ஆபத்தை உண்டாக்கும், என அமெரிக்கா அஞ்சியது.

இதையடுத்து, உளவு செயற்கைகோளை விண்ணிலேயே சுட்டு வீழ்த்த அமெரிக்கா முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து,  பசுபிக் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து எஸ்எம்-3 என்ற செயற்கை கோளை விண்ணில் ஏவியது.

இந்த ஏவுகணை துல்லியமாகப் பாய்ந்து உளவு செயற்கை கோளை தாக்கியது. கடல் மட்டத்தில் இருந்து 133 கிமீ., உயரத்தில் உளவு செயற்கை கோள் சிதறடிக்கப்பட்டது.

இதனால், பூமிக்கு நிகழவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த உளவு  ஏவுகணை குறித்து மேலும் பல தகவல்களை அமெரிக்கா சொல்ல மறுத்து விட்டது.

அதே வேளையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

பிரபாகரன் கை துண்டிப்பா...?


 லண்டன் : இலங்கை ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கை துண்டிக்கப்பட்டு விட்டதாக லண்டன் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த இணைய இது குறித்து கூறியிருப்பதாவது :

விடுதலைப் புலிகளின் தளங்கள் மீது கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியும், கடந்த மாதம் 23ம் தேதியும் இலங்கை  விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பலத்த காயமடைந்தார்.

பிரபாகரனுக்கு உரிய சிகிச்சை கிடைக்காததாலும், அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாலும் காயத்தின் காரணமாக அவரது கைகளின் ஒன்று துண்டிக்கப்பட்டது. அவர் ஒரு முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. அவருடைய அதிகாரங்கள் எல்லாம் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மனிடம் உள்ளது.

இவ்வாறு அந்த இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

 

கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஓய்வு


கடந்த 49 ஆண்டுகளாக கியூபாவின் அதிபர் கட்டிலை அலங்கரித்த பிடல் காஸ்ட்ரோ தனது பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 19ம் தேதி அறிவித்தார்.

கியூபாவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் அவர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

கடந்த 1959ம் ஆண்டு கியூபா புரட்சியின் மூலம் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஆட்சியைப் பிடித்த பிடல் காஸ்ட்ரோ அன்றில் இருந்து இன்று வரை தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வந்தார்.

கடந்த ஆண்டு, அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக தொடர்ந்து அதிபர் பொறுப்புகளை கவனிக்க முடியாமல்  போனது. எனவே, தனது சகோதரர் ரவூல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு இதுநாள் வரை ஓய்வில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அதிபர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக முறைப்படி அறிவித்தார்.

 

யார் இந்த காஸ்ட்ரோ?


 1959 இல் புரட்சியை வழிநடத்தி சர்வாதிகாரி புல்ஜெனிசியோ பாட்டிஸ்ட்டாவின் (Fulgencio Batista) அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் குடியரசுத் தலைவராய் (ஜனாதிபதியாகப்) பதவியேற்றார்.

கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ தனது 81வது வயதில் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

கியூபா அமெரிக்காவில் இருந்து 93 மைல்கள் தொலைவில் இருந்தாலும், தன்னிச்சையான கம்யூனிஸ நாடாக இது விளங்குவதற்கு மூல காரணம்  பிடல் காஸ்ட்ரோதான். அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டி ஆட்டிய காஸ்ட்ரோ,

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவே இன்றும் இருந்து வருகிறார்.
 
முதலாளித்துவத்தின் தலைமை இடமாக கருதப்படும் அமெரிக்காவின் வாயில் பகுதியிலேயே கம்யூனிச நாட்டை உருவாக்கிய  துணிச்சல் மிக்கவராக பாராட்டப்படும் காஸ்ட்ரோ, தமக்கு எதிராக 10 அமெரிக்க அதிபர்கள் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு மற்றும் கொலை முயற்சிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டவர்.

கம்யூனிச சித்தாந்தத்தை செயல்படுத்திய அவர், நிலங்களை நாட்டுடமையாக்கிய போது  முதல் முதலில் கைவைத்தது தன்னுடைய குடும்ப நிலத்தின் மீதுதான். இடதுசாரி சிந்தனை கொண்டவர்களின் நம்பிக்கை நாயகனாக கருதப்படும் சேகுவாராவோடு இணைந்து  கியூபா புரட்சியை ஏற்படுத்தி பின்னர் நாட்டில்  பொதுவுடைமையை  மலர செய்த காஸ்ட்ரோ,

அனைவருக்கும்  கல்வி மற்றும் சுகாதார வசதிகளை செய்து தந்ததில்  முன்னோடியாக கருதப்படுகிறார்.வல்லரசாக திகழ்ந்த அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் அந்நாட்டுக்கு அருகாமையிலேயே அமைந்திருந்த கியூபாவை  கம்யூனிச பூமியாக அவர் மாற்றி காட்டினார்.  இதன் காரணமாக அமெரிக்க அதிபர்கள் தொடர்ந்து அவரை ஆட்சியிலிருந்து அகற்ற  முயன்று வந்தனர். சி.ஐ.ஏ. மூலம் கொலை முயற்சிகளும் நடத்தப்பட்டன. அனைத்திலிருந்தும் காஸ்ட்ரோ வெற்றிகரமாக தப்பித்து கொண்டார்.

பனிப்போர் காலத்தில் அவர் மாஸ்கோவுக்கு ஆதரவாக இருந்து அமெரிக்காவின் கடுங்கோபத்திற்கு ஆளானார். சோவியத் யூனியன்  சிதறுண்ட பிறகும் கியூபாவின் தனித்தன்மையை அவர் கட்டிக்காத்து வந்தார்.

சர்வாதிகாரியாக செயல்படுகிறார்,  ஜனநாயகத்தை நசுக்குகிறார் எனும் விமர்சனத்துக்கு ஆளானாலும், காஸ்ட்ரோ ஏழை எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இன்றும் போற்றப்படுகிறார்.

சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும்  ஆளானவர் என்றாலும், காஸ்ட்ரோ உலகம் கண்ட மகத்தான தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.  நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்கான முன்னோடி  மனிதராக அவர் என்றென்றும் போற்றப்படுவார்.

இன்றும் அமெரிக்கா மூக்கில் விரல் வைத்துப் பார்க்கும் முக்கிய மனிதராக பிடல் காஸ்ட்ரோ திகழ்கிறார்.

 

விஸ்காசின் : ஒபாமா.மெக்கெய்ன் வெற்றி


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலில் விஸ்கான்சின் மாகாணத்தில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சியில் ஜான் மெக்கெய்னும் இந்த மாகாணத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பல்வேறு மாகாணங் களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கும், கருப்பின தலைவரான பாரக் ஒபாமாவுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.

 

ஹிலாரிக்கு எதிராக ஒபாமா பெற்றுள்ள 9வது நேரடி வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ஒபாமாவுக்கு அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரித்து உள்ளது.

பெண்கள் மத்தியில் ஒபாமாவுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே குடியரசு கட்சியில் செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் விஸ்கான்சின் மாகாணத்திலும் வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவிலும் மெக்கைன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அடுத்த  அதிபர் பதவிக்கான வேட்பாளராக மெக்கைன் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code