அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
வார ராசிபலன் : 20.7.08 முதல் 26.7.08 வரை
Sunday, 09 March 2008

மேஷ  ராசி அன்பர்களே! 

 

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

 

இந்த வாரம் 20ம் தேதி வீட்டு வசதியும் வெளிவட்டாரக் கலகலப்பும் அதிகரிக்கும். ஆனாலும், சந்தோஷங்களுக்காக அதிகப்படியாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.21, 22 ஆகிய தேதிகளில் கவனத் தடுமாற்றங்களும், காரிய நெருக்கடிகளும், வெளிவட்டார அலைக்கழிப்புகளும் தீவிரமாகி உங்களைச் சுற்றலில் விடும். ஆனாலும், பணம் வரவும், ஆதாய சகாயங்கள் கிடைக்கவும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.23ம் தேதி இரவு, புதன் சுகஸ்தானத்திற்கு வந்து காரிய ஸ்தானத்தைப் பார்வையிடுவதால், நட்புறவு ஆறுதலும் உதவியும் கிடைக்கும். சமயோஜித சாமர்த்தியங்களைப் பயன்படுத்திப் பொறுப்புகளைச் சமாளித்துக் கொண்டு வரலாம்.

ஆனால், உங்கள் புத்திஸ்தானத்தில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருப்பதால் அடிக்கடி குதர்க்கம், கலக்கம், கோபதாபங்கள், விவகாரமான பிரச்னை மன அமைதியை பாதிப்பது சகஜம். பிள்ளைகள், சகோதரர்கள், பூர்வீக சொத்து, உத்தியோகம், விவசாயம், தொழில் அமைப்பு, அரசாங்கம், மேலிடம் சம்பந்தமாகவும் இடையூறுகள் நேரிடக்கூடும். எச்சரிக்கை அவசியம்.23, 24 ஆகிய தேதிகளில் செலவுகள் அதிகம். 25, 26 தேதிகளில் ஊக்கமும் உற்சாகமும் பெறுவீர்கள்!

 

 

ரிஷப ராசி அன்பர்களே!

 

கார்த்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிடம் 2ம் பாதம் முடிய)

 

இந்த வாரம் 20ம் தேதி முன்னிரவு வரையில் செலவும் அலைச்சலும் அதிகம்.20ம் தேதி முன்னிரவு முதல் 22ம் தேதி வரையில், சந்திரன் காரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முக்கியமான பல வேலைகளையும் மும்முரமாகச் செயல்படுத்திக் கொள்ளலாம்.எந்தப் பொறுப்பிலுமே, சுமையும் சிரமமும் அதிகம் என்பதில் மட்டும் மாறுதல் கிடையாது. சனியும், செவ்வாயும் சுகஸ்தானத்தில் சேர்ந்துள்ளதும், இக்கிரகங்களின் கொடிய பார்வைகள் ஜீவன காரிய ஸ்தானத்தில் பதிவதும் நல்லதல்ல.

இதனால் இருப்பிடம், குடியிருப்பு, வீடு, மனை நிலம் முதலான, சொத்து பத்துகளில் நிர்வாக சங்கடமோ வில்லங்க விவகாரமோ ஏற்படக்கூடும். உத்தியோகம், தொழில், வியாபாரம், விவசாயம்,சம்பந்தமாகவும் செயல் சிரமங்கள், தடை தாமதப் பிரச்னைகள் தொடரும்.மற்றபடி, தைரிய ஸ்தானத்தில் சூரியன் கேது சேர்ந்துள்ளதால் தைரிய சமாளிப்பு, அரசாங்க நன்மை, அதிகாரிகளின் ஒத்துழைப்பு, அரசியல் அபிவிருத்தி, மருத்துவ அனுகூலம் உண்டு.பெண்களால், உதவியும் உற்சாகமும் கிடைக்கும்.23, 24 ஆகிய தேதிகளில், பணம் வரும். 25, 26 ஆகிய தேதிகளில் செலவும் அலைக்கழிப்பும் அதிகம்.

 

 

மிதுன ராசி அன்பர்களே!

 

(மிருகசீரிடம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)

 

இந்த வாரம் 20ம் தேதி இரவு மணி 7.15 வரையில் சந்திராஷ்டமம் உள்ளது. கவனத் தவறுதலும், குளறுபடியான திட்டங்களும், வீண் அலைச்சலும், செயல் சிரமங்களும் ஏற்படக்கூடிய காலக்கட்டம் என்பதால் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.20ம் தேதி, முன்னிரவுக்கு மேல் மாறுதலும் ஆறுதலும் கிடைக்கும்.பணம் கொடுக்கல் வாங்கல், பேச்சு வார்த்தைகள், குடும்பப் பிரச்னைகள் ஆகியவற்றில் குளறுபடிகள் இருப்பது மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கும். முன்பின் யோசிக்காமல், விகல்பமும் குதர்க்கமுமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்.தகப்பனார், மாமன்மார், மைத்துனர்கள், நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது.


அரசாங்கம், அரசு அதிகாரிகள், அரசியல், அரசியல்வாதிகள் தொடர்பாகவும் இப்போது காரிய சாதகமான நிலைமை இல்லை.மற்றபடி உத்தியோகம், தொழில்துறை, இரும்பு இயந்திரங்கள், மின்சாதனங்கள், பொறியியல், கட்டடக்கட்டுமானம், ஆயுதப்பணி, நெருப்பு உபயோகம், சட்டம் காவல்துறை சம்பந்தமான நன்மைகள் கைகூடும்.23, 24 ஆகிய தேதிகளில் காரிய பலிதம் உண்டு. 25, 26 தேதிகளில் பணம் வரும். ஆதாய சகாயங்கள், சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்!

 

 

கடக ராசி அன்பர்களே!


(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)


இந்த வாரம் 20ம் தேதி ஆறுதலும் கலகலப்பும் உண்டு. ஆனாலும், 20ம் தேதி இரவு மணி 7.16க்கு சந்திராஷ்டமம் ஆரம்பித்து 22ம் தேதி பின்னிரவு மணி 2.57 வரையில் நடைபெறும். தடுமாற்றங்களும் அலைக்கழிப்புகளும் சிரமங்களும் ஏற்படக்கூடிய காலக்கட்டம் என்பதால், எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.உங்கள் ஜென்ம ராசியில், சூரியனும் கேதுவும் சஞ்சரிப்பதால் பொதுவாகவே ஓரிடத்தில் நிலையாக இருக்க முடியாமல், அலுவல் பிரச்னைகள் அங்கும் இங்குமாக அலைமோதவைக்கும்.தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில், செவ்வாயும் சனியும் சேர்ந்துள்ளதாலும் விரும்பத்தகாத விளைவுகள் உண்டு. திடீர் பணநெருக்கடி, தட்டுப்பாடுகளால் தத்தளிப்பு, கடன் நிர்பந்த நெருக்கடிகளால் கவலை, கலக்கம், சூடான பேச்சு வார்த்தைகள், வாக்குவாதங்கள், குடும்ப சச்சரவுகள், வெளியிடங்களிலும் வீண் விவகாரங்கள் ஏற்படக்கூடும்.உத்தியோகம், தொழில், வியாபாரம், விவசாயம் ஆகியவற்றிலும் இடையூறுகள் அதிகம்.சட்டம், காவல்துறை தொடர்பாகவும் உஷாராக இருந்து கொள்ளுங்கள்!பெண்களால் ஓரளவு ஆறுதல் பெறலாம்.25,26 ஆகிய தேதிகள் காரியநன்மைக்கும் கலகலப்புக்கும் உகந்த நாட்கள்.

 

 

சிம்ம ராசி அன்பர்களே!

 (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)


இந்த வாரம் 20ம் தேதி பணம் வரக்கூடும். வசூலிப்பு முயற்சிகளுக்கு, நல்ல பலன் கிடைக்கும். காரியபலிதம் உண்டு. சீர்திருத்தங்களையும், முன்னேற்பாடுகளையும் சரிவரச் செய்து கொள்ளலாம். சந்தோஷமான அனுபவங்களையும் சந்திக்கலாம்.21, 22 ஆகிய தேதிகளில், வேலை நெருக்கடிகள் விடாமல் துரத்தும் என்றாலும், இடையிடையே உதவிகள், உபயோகங்கள், ஆறுதல்களும் உண்டு.புதன் கிரகத்தின், சஞ்சாரம் 23ம் தேதி வரையில் வலுவாகவும் சாதகமாகவும் இருக்கிறது.

இதனால் படிப்பு, எழுத்து, கணிதம், இலக்கியம், புத்தகம், பத்திரிகை, ஆவணம், விண்ணப்பம், தகவல் தொடர்புகள் அபிவிருத்தியாக அமையும். நல்ல செய்திகள் வரும். தரகு, கமிஷன், ஏஜென்சி தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும். மாமன்மார், மாமனார், மைத்துனர்கள், நண்பர்களுடைய சகாயங்கள் கைகூடவும், 23ம் தேதி வரையில் தான் உகந்த காலம். அதன் பின் இவ்வகையில் செலவுகளே அதிகம்.தகப்பனார், மனைவி, மற்ற பெண்கள் சம்பந்தமாகவும், அரசாங்கம், அதிகாரிகள், அரசியல், மருத்துவம் தொடர்பாகவும் செலவும் அலைக்கழிப்புகளும் தொடர்கின்றன.உத்தியோகம், தொழில்துறையில் உழைப்பின் சங்கடம் அதிகம்.23, 24 ஆகிய தேதிகள் சந்திராஷ்டம நாட்கள். கவனம் தேவை.

 


கன்னி ராசி அன்பர்களே!


(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் முடிய)


இந்த வாரம் 20ம் தேதி, இரவு மணி 7.15 வரையில் கவனத் தடுமாற்றங்களும் திட்டமிடுவதில் குளறுபடிகளும், வீணான அலைக்கழிப்புகளும், அதிகப்படியான செலவினங்களும் ஏற்படக்கூடும். அனாவசிய சபலங்களைக் கட்டுப்படுத்திக் கவனமாக இருந்து கொள்வது நல்லது.20ம் தேதி இரவு மணி 7.16 முதல், 22ம் தேதி வரையில் மாறுதலும் ஆறுதலுமான திருப்பங்கள் நிகழும். இந்தக் காலக்கட்டத்தில் பணவரவுக்கும், பொருள் சேர்க்கைக்கும் காரியங்கள் சாதகமாக நடைபெறுவதற்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

தகப்பனார், மாமன்மார், மைத்துனர்கள், நண்பர்கள், மனைவி, மற்ற பெண்கள் சம்பந்தமான, உதவியும் உற்சாகமும் கிடைக்கும்.அரசாங்கம், அதிகார வர்க்கம், அரசியல், மருத்துவம், ரசாயனம், கல்வி முயற்சி, புதிய பயிற்சி, எழுத்து, கணிதம், தொகுப்பு, ஆவணம், விண்ணப்பம், தரகு, கமிஷன், ஏஜென்சி, செய்தித் தொடர்புகள் சம்பந்தமான நன்மைகள் கைகூடும்.மற்றபடி விரயச் சனி, செவ்வாயால் உத்தியோகம், தொழில்துறை சிரமங்களும், கடுமையான செலவினங்களும் தொடரும்.23, 24 ஆகிய தேதிகளில் ஊக்கமும், உபயோகம் உண்டு. 25, 26 தேதிகள் சந்திராஷ்டம நாட்களாகும். கவனம் தேவை.

 

  

துலா ராசி அன்பர்களே!

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் முடிய)


இந்த வாரம் 20ம் தேதி, முன்னிரவு வரையிலும் வீட்டுப் பொறுப்பானாலும் வெளி வேலையானாலும் அலைக்கழிப்பு அதிகம்.20ம் தேதி முன்னிரவுக்கு மேல் மாறுதலும் ஆறுதலும் கிடைக்கும்.பொறுப்புகளைப் பொறுத்தவரையில் அவசர நெருக்கடிகளும், உடனுக்குடன் ஏற்படும் நேர நிர்பந்தங்களும், அவ்வப்போது சரிப்படுத்த வேண்டிய அலுவல் பிரச்னைகளும், உங்களை விடாமல் விரட்டிக் கொண்டிருக்கும்.23ம் தேதி இரவு புதன் கிரகம் காரிய ஸ்தானத்தில் பிரவேசித்து அங்கு சஞ்சரிப்பதால், சரியாகத் திட்டமிடவும் சமயோஜித சாமர்த்தியமாக சமாளிக்கவும், நல்ல சந்தர்ப்பங்கள் ஒத்துழைக்கும். அறிவாளிகள், அனுபவசாலிகள், நல்ல நண்பர்களுடைய சந்திப்பும் சகாயமும் கிடைக்கும்.உத்தியோகம், தொழில்துறை தொடர்பான ஆதாய அபிவிருத்திகள் உண்டு.23, 24 ஆகிய தேதிகள் பணம் வரும் நாட்கள். 25, 26 ஆகிய தேதிகளில் ஊக்கமும் உபயோகமும் உற்சாகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

 

 

விருச்சிக ராசி அன்பர்களே!

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)


இந்த வாரம் 20ம் தேதி பணம் வரும் வசூலிப்பு முயற்சிக்கு நல்லபலன் கிடைக்கும். பொருட்கள் சேரும். காரியம் பலிதமாகும் சகாயமும் சந்தோஷமுமான சந்தர்ப்பங்களையும் சந்திப்பீர்கள்!21, 22 ஆகிய தேதிகளில், வேலை நெருக்கடிகளும் வெளிவட்டாரத் தொடர்புகளும் தீவிரமாகிவிடும்.படிப்பு, பயிற்சி, கணிதம், கணக்கெடுப்பு, புள்ளிவிவரம், விஷய சேகரிப்பு, ஆவணம், விண்ணப்பம், செய்திப் போக்குவரத்துகள் ஆகியவற்றிற்கு, 23ம் தேதி வரையில் வலுவாக சஞ்சரிக்கும் புதன் கிரகத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும்.மாமன்மார், மைத்துனர், நண்பர்களுடைய ஆதரவு, சகாயம் கிடைக்கவும் 23ம் தேதி வரை உகந்த காலமாகும்.மற்றபடி காரிய ஸ்தானத்தில் உள்ள சனி, செவ்வாய் சேர்க்கையால் அடிப்படையான எந்த வேலைகளிலும், இடையூறுகள் அதிகப்படுவது வழக்கமான நிலவரம் கடினமாக உழைக்காமல், எதுவும் சுலபமாகவோ குறித்த காலத்திலோ ஆகாது.அரசாங்கம், அரசியலும் அனுகூலமாக இல்லை.
பெண்களாலும், பொழுதுபோக்குகளாலும் ஆறுதல் பெறலாம்.25, 26 ஆகிய தேதிகளிலும் பணம்வரும். காரியம் ஆகும்.

 

 

தனுசு ராசி அன்பர்களே!

 மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)


இந்த வாரம் 20ம் தேதி, பேச்சுவார்த்தைகளில் குதர்க்கமும் குடும்ப நிர்வாகத்தில் குளறுபடிகளும் ஊடுருவும்.20ம் தேதி இரவு மணி 7.16 முதல், 22ம் தேதி வரையில், சந்திரன் தைரிய பராக்கிரம ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், ஊக்கம் அதிகரிக்கும். உருப்படியான காரியங்களைச் செயல்படுத்தலாம். பணம் வரும். பொருட்கள் சேரும். உதவிகள் கிடைக்கும். முக்கியப் பொறுப்புகள் நிறைவேறும்.உத்தியோகம், தொழில்துறையில் கடினமான வேலைகள் சிரமப் படுத்தும்.அரசாங்கம், அதிகாரிகள், அரசியல், அரசியல்வாதிகள் சம்பந்தமாக கெடுபிடி நிர்பந்தங்கள் சிரமப்படுத்தலாமே தவிர, சகாயம்; ஆதாயம் என்பது கிடையாது.தகப்பனாருக்கு அசவுகரியமோ, அவரால் உங்களுக்கு இடையூறுகளோ நேரிடலாம்.பெண்களால் உதவியும் ஆறுதலும் உண்டு.24ம் தேதி முதல் உறவினர்கள், நண்பர்களுடைய சந்திப்புகளும் சகாயங்களும் கைகூடும்.25, 26 ஆகிய தேதிகள் கலகலப்பான நாட்கள்.

 

 

மகர ராசி அன்பர்களே!

 

 மகர ராசி அன்பர்களே!


இந்த வாரம் 20ம் தேதி, வழக்கமான அலுவல் சிரமங்களிலிருந்தும் பிக்கல்பிடுங்கலான பிரச்னைகளிலிருந்து, தற்காலிகமாக விடுபட்டு ஆறுதலாக இருக்கலாம்.ஆனால், மனைவி, மற்ற பெண்கள் வகையில் அனுசரிப்பு, ஆறுதல், உதவி, சந்தோஷம், திருப்திகரமாகக் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. சுக்கிரன் ஏழாமிடத்தில் சூரியன் கேதுவுடன் சேர்ந்துள்ளதால், கணவன் மனைவி உறவில் குறைகளும் குதர்க்கங்களுமே அதிகரித்து, இனிய நல்லிணக்கம் குறைந்துவிடும். பொதுவாகப் பெண்களால் இப்போது தொல்லைகளே.

தகப்பனார், சகோதரர்களிடமும் மனக்குறையோ, சச்சரவுகளோ நேரக்கூடிய காலம் இது என்பதால், கூடுமான வரையில் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.மாமன்மார், மைத்துனர், நண்பர்களின் உதவிகள் 23ம் தேதி வரையில் கிடைக்கலாம். அதன்பின் நட்புறவுகளிலும், விகல்பங்கள் ஊடுருவும்.உத்தியோகம், விவசாயம், தொழில்துறைகளில் அஷ்டமச்சனி, செவ்வாயின் சஞ்சாரம் அவதிப்பாடுகளையே அதிகரிப்பதாகும்.23, 24 ஆகிய தேதிகளில் பணம் கிடைக்கும். காரியம் கைகூடும்.

 

 

கும்ப ராசி அன்பர்களே!

 

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் முடிய)


இந்த வாரம் 20ம் தேதி, முன்னிரவு வரையில் செலவுகளும் அலைக்கழிப்புகளுமே அதிகரிக்கக் கூடிய காலமாகும்.20ம் தேதி முன்னிரவு முதல் 22ம் தேதி வரையில், ஊக்கத்துடன் உபயோகமான பலகாரியங்களையும் செயல்படுத்தலாம்.உற்சாகமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு உரிய, மன நிலையோ சூழ்நிலையோ இடம் கொடுப்பதில்லை என்பது தான் மனக்குறையான விஷயம்.

 மேலும், சுக்கிரன் பகை ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆடம்பரம், வாகனம், கேளிக்கைகள், பெண்கள் சம்பந்தமாக ஏற்படக்கூடிய சந்தோஷங்களுக்கும் முட்டுக்கட்டைகள் குறுக்கிடுவது தானே அதிகம்?ஏழாமிடத்தில் உள்ள சனி, செவ்வாய் சேர்க்கையால் கணவன் மனைவி உறவு கடுகடுப்பும் சிடுசிடுப்பும் நிறைந்ததாகவே இருக்கிறது. உத்தியோகம், தொழில்துறை, விவசாயம் தொடர்பாக உபத்திரவங்களே தீவிரமாக உள்ளன. பொறுப்புகளின் சிரமங்கள் ஆரோக்கியத்தையும் குறைத்துவிடக்கூடும் என்பதால், உடல் நலத்தில் கவனமான அக்கறை அவசியம்.25, 26 ஆகிய தேதிகள், பணவரவுக்கும் செயல் நன்மைக்கும் சந்தோஷங்களைச் சந்திப்பதற்கும் உகந்த நாட்கள்.

 

மீன ராசி அன்பர்களே!

 (பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


இந்த வாரம் 20ம் தேதி முன்னிரவு வரையிலும் சந்திரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணம் வரக்கூடும். பொருட்களும் சேரும். ஆதாயம், சகாயம், சந்தோஷம் என்றெல்லாம் கிடைக்கப் பெறலாம்.ஆனால், 21ம் தேதி இரவு மணி 7.16 முதல், 22ம் தேதி வரையில், சந்திரன் விரய ராசியில் சஞ்சரிப்பதால், இந்தக் காலக்கட்டத்தில் செலவுகளும் அலைக்கழிப்புகளுமே அதிகப்படும். கையிருப்புப் பணம் கடும் வேகத்தில் கரைந்து போகும். வெளியே போய்வரும் போது எடுத்துச் செல்லும் பணம், பொருள் ஆகியவற்றைக் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்வது அவசியமாகும்.

படிப்பு, எழுத்து, கணக்கு, தேர்வு, புள்ளிவிவரம், ஆவணம், விண்ணப்பம், செய்தித் தொடர்புகள் சாதகமாக அமைவதற்கும், நல்ல தகவல்கள் கிடைப்பதற்கும், 23ம் தேதி வரை புதன் கிரகத்தின் ஒத்துழைப்பு உண்டு.மாமன்மார், மைத்துனர், நண்பர்கள், கல்வி நிபுணர்கள், கணக்காளர்கள், முகவர்கள், வர்த்தக வல்லுனர்கள், நடுநிலைத் தொடர்பாளர்களுடைய உதவிகள் கிடைக்கவும், 23ம் தேதி வரையில் உகந்த காலம்.அரசாங்கம், அரசியல் அனுகூலமாக இல்லை.மற்றபடி உத்தியோகம், தொழில்துறை அபிவிருத்தியாகும்.23, 24 ஆகிய தேதிகள், ஊக்கமும் உற்சாகமும் தரும் நாட்கள்.